சேலம்: சேலம் அருகே, ரேஷன் அரிசி கடத்தியவரை பிடிக்க தயக்கம் காட்டிய போலீஸ்காரருக்கு, எஸ்.பி., 'பளார்' விட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மண்டல உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., பாலாஜி, சேலத்தில் இருந்து காரில் கோவைக்கு நேற்று சென்றார். காகாபாளையத்தை நெருங்கிய நிலையில், இரு சக்கர வாகனத்தில், இரண்டு மூட்டை ரேஷன் அரிசியுடன் ஒருவர் சென்றார். இதை கவனித்த எஸ்.பி., டூவீலரை துரத்தினார். அதேநேரம், காகாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, கொண்டலாம்பட்டி ரோந்து வாகன எஸ்.எஸ்.ஐ., அந்தோணி, டிரைவர் சிவக்குமார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
பள்ளி அருகே உள்ள மண் சாலை வழியே, 'டூவீலர்' வேகமாக சென்றது. ரோந்து போலீசாரிடம், கடத்தல் வாகனத்தை பிடிக்கும்படி எஸ்.பி., உத்தரவிட்டார். அவர்கள் தயக்கம் காட்டி, 'துரத்திச் சென்றால் தாக்குவர்' என தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த எஸ்.பி., பாலாஜி, டிரைவர் சிவக்குமார் கன்னத்தில் அறைந்தார். போலீஸ் டிரைவரை, எஸ்.பி., கன்னத்தில் அடித்தது, சேலம் மாநகர போலீஸ் 'வாட்ஸ் ஆப்' குழுக்களில் பரவி வருவதோடு, போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.