பல்லடம்: போலி வாரன்ட் பயன்படுத்தி, பல்லடத்தை சேர்ந்த ஜவுளி நிறுவன உரிமையாளரை கடத்த திட்டமிட்ட ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் மாணிக்காபுரம் ரோட்டை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 40; ஜவுளி நிறுவன உரிமையாளர். ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரம்மநாயுடு, 38. பருத்தி மில் நடத்தி வருகிறார்.மில்லில் நுால் வாங்கியதில், பாக்கி பணத்தை தராமல் இழுத்தடிப்பதால், தமிழ்செல்வனை கைது செய்து அழைத்து செல்ல கோர்ட்டில், 'வாரன்ட்' பெற்றுள்ளதாகவும், அவரை ஒப்படைக்குமாறும் பல்லடம் போலீசில் மில் நிர்வாகிகள் மனு அளித்தனர். இவர்களுடன் ஆந்திர போலீஸ்காரர் கோபி என்பவரும் வந்திருந்தார்.
இது போலி வாரன்ட் என்பதை, தமிழ்செல்வன் தரப்பு வக்கீல்கள் உறுதி செய்தனர்.இதையடுத்து, போலி வாரன்ட் கொண்டு வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார், 40, வெங்கடகிருஷ்ணா, 49, வெங்கடேஸ்வரலு, 48 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சத்யநாராயணா, கோபி ஆகியோரை தேடி வருகின்றனர். தமிழ்செல்வனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டு, வேறொருவருக்கு பிறப்பிக்கப்பட்ட கைது வாரன்ட்டை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பல்லடத்தை சேர்ந்த, மேலும் ஐந்து டெக்ஸ்டைல் நிறுவன உரிமையாளர்களிடமும் இதே வழிமுறையை பயன்படுத்தி கடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.