'காப்பியடிக்கும் இயக்குனர்களுக்கு உதவும்!'
கோவை, கொடிசியா அரங்கில் நடந்த புத்தக கண்காட்சியில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய, 'டிராவல் டால்ஸ் ஆப் ஏ சிஓபி' என்ற, அவரது பயண கதைகள் குறித்த நுால் வெளியிடப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கோவை கலெக்டர் சமீரன் பங்கேற்றார். அவர் பேசுகையில், 'போலீஸ் கமிஷனர் எழுதியுள்ள புத்தகத்தை படித்த போது, மிகவும் பிரமாண்டமாக இருந்தது. விரைவில் திரைப்படமாகவோ அல்லது, 'நெட்பிளிக்சில் சீரியல்' தொடராகவோ வர வாய்ப்பு இருக்கிறது' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'போலீஸ் அதிகாரிகள் ஒவ்வொருவரின் பணி அனுபவமும், பல்வேறு சுவாரஸ்யங்கள் அடங்கியது தான்... அரைத்த மாவையே அரைப்பதும், அடுத்த மொழி படங்களை காப்பியடிப்பதுமாக இருக்கும் இயக்குனர்களுக்கு, இந்த கதைகள் படம் எடுக்க உதவியாக இருக்கும்...' என, முணுமுணுத்தபடி நடையை கட்டினார்.