சென்னை :டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய சூட்டோடு, சென்னை திரும்பியுள்ள நடிகர் ரஜினி நேற்று காலை கவர்னர் ரவியை திடீரென சந்தித்தார். அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், இருவரும் அரசியல் பேசியதாக வெளிப்படையாக ரஜினி கூறியிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இரண்டு நாள் பயணமாக டில்லி சென்றிருந்த நடிகர் ரஜினி, நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். அதைத் தொடர்ந்து, நேற்று காலை 11:30 மணியளவில், கிண்டி கவர்னர் மாளிகையில், கவர்னர் ரவியை சந்தித்துப் பேசினார்.
ஆன்மிக உணர்வு
அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்புக்கு பின், வீட்டுக்கு திரும்பிய ரஜினி, போயஸ் கார்டன் இல்லம் முன் அளித்த பேட்டி:கவர்னர் ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன். இருவரும் 25 -- 30 நிமிடம் பேசிக் கொண்டிருந்தோம். அவர் வட மாநிலங்களிலேயே இருந்தவர். தமிழகத்தை மிகவும் நேசிக்கிறார். தமிழ் மக்களின் நேர்மை, கடின உழைப்பு ஆகியவை அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. முக்கியமாக, தமிழகத்தில் இருக்கும் ஆன்மிக உணர்வு, அவரை மிகவும் ஈர்த்திருக்கிறது.'தமிழகத்தின் நன்மைக்காக எதை செய்யவும் தயாராக இருக்கிறேன்; எவ்வளவு இழக்கவும் தயாராக இருக்கிறேன்' என்று என்னிடம் தெரிவித்தார். அரசியல் பற்றியும் விவாதித்தோம். அதைப் பற்றி ஊடகங்களிடம் இப்போது பகிர்ந்து கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
'மறுபடியும் அரசியலுக்கு வருவது குறித்த திட்டம் ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டபோது, ''அப்படி திட்டம் ஏதும் இல்லை,'' என்று தெரிவித்தார். 'வரும் 2024 லோக்சபா தேர்தல் குறித்து பேசினீர்களா?' என்ற கேள்விக்கு, ''அது பற்றி இப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது,'' என்றார்.பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு, 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டது பற்றிய கேள்விக்கும் பதிலளிக்க மறுத்து விட்டார். ஜெயிலர் சினிமா படத்தின் படப்பிடிப்பு, வரும் 15 அல்லது 22-ம் தேதி துவங்கப்பட உள்ளதாக, ரஜினி தெரிவித்தார்.
மோடியுடன் சந்திப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம் பற்றி விவாதிக்க, 6-ம் தேதி டில்லியில் அனைத்து கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அதில், பிரதமர் மோடியின் தனிப்பட்ட அழைப்பில் ரஜினி கலந்து கொண்டார். அவருடன் மகள் ஐஸ்வர்யாவும் டில்லி சென்றிருந்தார்.இந்த கூட்டத்தில் ஹிந்தி சினிமா நடிகர் அனுபம் கெர், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த சந்திப்பின்போது, அரசியல் வேறுபாடுகளை மறந்து, பரூக் அப்துல்லா உள்ளிட்டோரிடம் மோடி சகஜமாக பேசியுள்ளார். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ரஜினியிடம் புகைப்படம் எடுத்து உள்ளனர்.அப்போது, பிரதமர் மோடியுடன் ரஜினி, 10 நிமிடங்கள் வரை பேசியுள்ளார்.
ஆர்வம்
ரஜினியின் உடல்நலம் பற்றி விசாரித்த மோடி, தமிழக அரசியல் நிலவரம், தி.மு.க., அரசு, குறிப்பாக முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் பற்றி ஆர்வமாக, பல்வேறு தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டார்.டில்லி பயணத்தை முடித்து, சென்னை திரும்பிய ரஜினி, கவர்னர் ரவியை அவரது அழைப்பை ஏற்று சந்தித்துள்ளார். பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன்படி ரஜினியை, கவர்னர் அழைத்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக, பா.ஜ., முக்கிய தலைவர்கள் சிலர் கூறியதாவது:கவர்னர் ரவி,- ரஜினி இருவரும் மனம் விட்டு பேசியுள்ளனர். நாட்டிலேயே அதிகமான கோவில்களை கொண்ட மாநிலம் தமிழகம். ஆன்மிக கலாசாரம் இன்னும் உயிர்ப்போடு உள்ள மாநிலம். ஆனாலும், அதற்கு நேர் எதிரான கொள்கை உள்ள கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கு குறித்து இருவரும் பேசியுள்ளனர்.
மோடி வேண்டுகோள்
தேசியம், ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்டவர் ரஜினி. உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வராவிட்டாலும், தமிழகத்தில் தேசியம், ஆன்மிகம் தழைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என, டில்லி சந்திப்பின்போது, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அது குறித்து கவர்னரும் ரஜினியிடம்
பேசியுள்ளார்.மேலும், 2024 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் அரசியல் சூழல் எப்படி இருக்கும்; கூட்டணிகள் எப்படி அமையும், அ.தி.மு.க., உள்கட்சி குழப்பத்தால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்பது குறித்தும் ரஜினியும் கவர்னரும் பேசியுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த ரஜினி, சென்னை திரும்பிய உடனே கவர்னர் ரவியை சந்தித்து பேசியிருப்பதும், இருவரும் அரசியல் பற்ற விவாதித்ததாக பகிரங்கமாக கூறியிருப்பதும், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
நடிகர் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது:ரஜினி, சிலருடைய நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து தான், 'அரசியலில் ஈடுபடப் போவதில்லை' என அறிவித்தார். அவர் பின்வாங்கினாலும், அவரை தொடர்ந்து தங்களுடைய நண்பராகவே பா.ஜ., தலைவர்களும், பிரதமர் மோடியும் வைத்திருக்கின்றனர்.இதனால், அக்கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் ரஜினி இருக்கிறார். இந்த சூழலில், ரஜினியை, லோக்சபா தேர்தலுக்கு முன் எப்படியாவது பா.ஜ.,வுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வைக்க வேண்டும்; முடிந்தால் பிரசாரத்துக்கும் பயன்படுத்த வேண்டும் என, டில்லியில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இரு நாட்களுக்கு முன், ரஜினிக்கு டில்லி பா.ஜ., தலைவர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்தது. 'சுதந்திர தின கொண்டாட்ட முன்னேற்பாடுகள் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்று டில்லியில் நடக்கிறது; அதில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என, பிரதமர் மோடி விரும்புகிறார்' என்று சொல்லியிருக்கிறார்.அதையடுத்தே, அவசர அவசரமாக டில்லி சென்ற ரஜினி, நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், சென்னை திரும்பியுள்ளார். நேற்று காலை, கவர்னர் ரவியை சந்தித்து பேசியுள்ளார். பேட்டியில், கவர்னருடன் அரசியல் பேசியதாக ரஜினி வெளிப்படையாகச் சொன்னதன் காரணமே, அவரை வைத்து, பல்வேறு அரசியல் நகர்வுகள் அரங்கேற துவங்கியுள்ளது தான். பா.ஜ.,வைப் பொறுத்தவரை, தமிழகத்தில் பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க., தினகரனின் அ.ம.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளை இணைத்து புதிய கூட்டணியை அமைத்து, லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள திட்டம் வகுத்திருக்கிறது.அதற்கு நடிகர் ரஜினியின் ஆதரவும் வேண்டும் என்று விரும்புகின்றனர். அதற்காகவே, நடிகர் ரஜினி டில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரிடம், இது குறித்தெல்லாம் பேசியுள்ளனர். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக, தேர்தல் நெருக்கத்தில் கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருக்கும் ரஜினி, 'பிரசாரத்தில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை' என்று தெரிவித்துள்ளார்.அரசியலுக்கு முழுக்குப் போட்டு முழுமையாக ஒதுங்கி விட்டதாக அறிவித்த பின், மக்கள் தன்னை ஏற்பரா என்ற சந்தேகம் இருப்பதாக சொல்லி இருக்கிறார். அதற்கு, பா.ஜ., தரப்பில் சில யோசனை சொல்லப்பட்டுஉள்ளது.அதன்படி, லோக்சபா தேர்தல் வரை, இப்போதும்கூட தாம் அரசியல் வட்டத்துக்குள் இருப்பதை அவ்வப்போது வெளிகாட்டும் விதமாக, ரஜினியின் செயல்பாடுகளில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.