திருப்பூர்:''தென் மாநிலங்களில் பா.ஜ.,வை காலுான்ற விட மாட்டோம்,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.திருப்பூரில் கடந்த, 6ம் தேதி துவங்கிய இ.கம்யூ., மாநில மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:ஒரு மொழி, ஒரு மதம், ஒரு நாடு என்ற கொள்கையுடன் மத்திய அரசு செயல்படுகிறது. அனைத்து மதங்களுக்கும் சமமான உரிமை வேண்டும். ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க மோடி அரசு முயற்சிக்கிறது. சனாதன சக்தி, ஹிந்துத்துவ சக்திகளை எதிர்க்க வேண்டிய நேரம் வந்துள்ளது.அதற்கேற்ப நாம் தயாராக இருக்க வேண்டும். தமிழகம், கேரளா உட்பட தென் மாநிலங்களில், பா.ஜ.,வை காலுான்ற விட மாட்டோம் என உறுதி ஏற்க வேண்டும். நாமும், நம் கூட்டணியும், ஒற்றுமை, வீர உணர்வுடன் இருந்தால், வேறு ஒரு மாநிலத்தில் பா.ஜ., நுழைவதை நம்மால் தடுத்து நிறுத்த முடியும்.நாம் வழிபாட்டுக்கு என்றும் தடை சொன்னது இல்லை. வழிபாடு வேண்டாம் என்றும் கூறவில்லை. குறிப்பிட்ட ஒரு மத வழிபாட்டை மட்டும் திணிக்க வேண்டாம் என்பதையே ஒவ்வொரு முறையும் வலியுறுத்தி சொல்கிறோம். எனக்கு கம்யூ.,களுடன் சேர்ந்து போராளி என்று சொல்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி, வேறு எதிலும் கிடைப்பதில்லை. இவ்வாறு, அவர் பேசினார்.