திருப்பூர்::தமிழக அரசு, மின் கட்டணத்தை உயர்த்தியதால் விசைத்தறி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 2.50 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன; இதனால், நேரடியாகவும், மறைமுகமாகவும், ஆறு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர், மின் கட்டண உயர்வு தொடர்பாக திருப்பூர் கலெக்டரிடம் நேற்று முறையிட்டனர்.விசைத்தறியாளர்கள் கூறியதாவது:தமிழக அரசு, 750 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவது பெரும் ஆறுதலாக இருக்கிறது. இந்நிலையில், 32 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தியதால், இனி, விசைத்தறி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 1,500 யூனிட்டுக்கும் அதிகமான நுகர்வுக்கு, யூனிட்டுக்கு, 4.60 ரூபாயாக இருந்த கட்டணம், 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன், நிலை கட்டணம், கிலோ வாட்டுக்கு, 70 ரூபாயாக இருந்தது, 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுஉள்ளது. ஆண்டுக்கு, 6 சதவீதம் வீதம், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு மின் கட்டணம் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, 36 சதவீதம் மின் கட்டணம் உயர்ந்தால், விசைத்தறி தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது.தமிழக முதல்வர், விசைத்தறி தொழிலுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்து, விசைத்தறியாளரையும், தொழிலாளரையும் காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Advertisement