சென்னை-'சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இன்று முதல் 14ம் தேதி வரை, தேசியத் திருவிழா பாதயாத்திரை நடத்தப்படும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை, தேசியத் திருவிழாவாக கொண்டாட உள்ளோம். அதையொட்டி, தென்காசியில் இன்று தமிழக மாணவர் காங்கிரஸ் சார்பில் பாத யாத்திரை துவங்குகிறது. அதில் நான் பங்கேற்கிறேன். நாளை பொள்ளாச்சி, 11ல் தர்மபுரி, 12ல் விழுப்புரம், 13ல் சோளிங்கர் ஆகிய இடங்களில் நடக்கும் பாத யாத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்.
காந்தி நடத்திய தண்டி யாத்திரைப் போலவே, காங்கிரஸ் கட்சி நடத்துகிற பாதயாத்திரை, மக்களின் மனதை நிச்சயம் கவரப் போகிறது. இதன் வாயிலாக, விடுதலை போராட்ட உணர்வுகள் நினைவுகூரப்பட்டு, தேசிய மறுமலர்ச்சிக்கு வித்திடுகிற வாய்ப்பு ஏற்பட்டுஉள்ளது. எனவே, இன்று முதல் 14ம் தேதி வரை, தமிழகம் முழுதும் தேசியத் திருவிழாவாக, 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடி, அதன் வாயிலாக தேசிய எழுச்சியை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.