புதுச்சேரியில் விமான சேவை விரிவாக்கம்: அக்டோபரில் துவக்க ஏற்பாடு| Dinamalar

புதுச்சேரியில் விமான சேவை விரிவாக்கம்: அக்டோபரில் துவக்க ஏற்பாடு

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (1) | |
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து திருப்பதி மற்றும் கொச்சி நகரங்களுக்கு விமான சேவை, அக்டோபர் மாதம் துவக்கப்பட உள்ளது.புதுச்சேரி, லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து, கடந்த 2013ம் ஆண்டு, 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனமும், 2015ம் ஆண்டு 'ஏர் இந்தியா' நிறுவனமும் பெங்களூருக்கு விமான சேவையை துவங்கின. ஆனால், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் இச்சேவைகள் நிறுத்தப்

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து திருப்பதி மற்றும் கொச்சி நகரங்களுக்கு விமான சேவை, அக்டோபர் மாதம் துவக்கப்பட உள்ளது.

புதுச்சேரி, லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து, கடந்த 2013ம் ஆண்டு, 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனமும், 2015ம் ஆண்டு 'ஏர் இந்தியா' நிறுவனமும் பெங்களூருக்கு விமான சேவையை துவங்கின. ஆனால், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் இச்சேவைகள் நிறுத்தப் பட்டன.latest tamil news

'உதான்' திட்டம்


இதற்கிடையே, நாடு முழுவதும் விமான சேவையை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதிய விமான கெள்கையை அறிவித்தது. அதன்படி, 'உதான்' திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்க திட்டமிடப் பட்டது. அதில், பயணிகளின் விமான கட்டணத்தில் பாதியை மத்திய அரசே ஏற்று, விமான நிறுவனங்களுக்கு அளிக்கும் என அறிவிக்கப் பட்டது.

அத்திட்டத்தில் சேர்ந்து, தடைபட்டிருந்த விமான சேவையை மீண்டும் தொடக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்தது.அரசின் முயற்சியால் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனம் ஐதராபாத்திற்கு விமான சேவையை தொடங்கியது. இதற்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, பெங்களூரு நகருக்கும் சேவையை துவக்கியது.


முடங்கிய சேவை


அதன் பின்னர் பெங்களூரு விமான சேவை நிறுத்தப்பட்டது. கொரோனா காலத்தில் விமான சேவைகள் முற்றிலும் இல்லாமல் போனது. கடைசியாக, 2020, மார்ச் 22ம் தேதிக்கு பிறகு புதுச்சேரியில் இருந்து விமானம் இயக்கப் படவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த மார்ச் 27ம் தேதி முதல் புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை துவங்கியது. 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனத்துடன் மீண்டும் ஒப்பந்தம் புதுப்பித்து, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது.தற்போது 78 சீட்கள் கொண்ட பம்பாடியர் விமானம் இந்நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.


latest tamil news

விரிவாக்கம்


இந்நிலையில், புதுச்சேரியில் இருந்தும் மேலும் சில நகரங்களுக்கு விமான சேவையை துவக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு 'ஸ்பைஸ் ஜெட்' விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெங்களூருக்கு மேலும் ஒரு விமானம் புதுச்சேரியில் இருந்து இயக்கப்பட உள்ளது. இதனை 'ஏர் அலையன்ஸ்' நிறுவனம் அனைத்து நாட்களிலும் இயக்க முன் வந்துள்ளது. இதற்கான பேச்சு வார்த்தை முடிந்துள்ளது.இது தவிர, திருப்பதி மற்றும் கொச்சி ஆகிய நகரங்களுக்கும் புதுச்சேரியில் இருந்து விமான சேவை துவக்கப்பட உள்ளது.


பயணிகளுக்கு சாதகம்


இந்த விமான சேவைகள், வரும் அக்., 30ம் தேதி முதல் துவக்க திட்டமிடப் பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து கொச்சிக்கு புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் விமான சேவை துவங்கப்பட உள்ளது. திருப்பதிக்கு திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நான்கு நாட்களில் விமானம் இயக்கப்பட உள்ளது.

இந்த இரண்டு நகரங்களுக்கும் விமானங்களை இயக்க 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனம் முன் வந்துள்ளது. புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு அதிக அளவில் மக்கள் ரயில், பஸ் மூலம் சென்று வருகின்றனர். வார விடுமுறை நாட்களில் கொச்சியில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விமான சேவை விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம் மாநிலத்தில் சுற்றுலா வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு நகரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X