சென்னை:சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா, சென்னையில் நேற்று மாலை கோலாகலமாக நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர் - வீராங்கனையருக்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பதக்கங்கள் வழங்கி பாராட்டினர்.
சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் ஜூலை 28ம் தேதி, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் துவக்க விழா நடந்தது. மாமல்லபுரத்தில் நடந்த செஸ் போட்டிகளில், 187 நாடுகளில் இருந்து, 2,000 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
மொத்தம் 11 சுற்றுகளாக, 12 நாட்கள் நடந்த இந்த போட்டியில், ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் மூன்று பதக்கங்கள் வழங்கப்பட்டன.தனி நபர் பிரிவிலும் அதிக புள்ளிகளை பெற்ற வீரர் - வீராங்கனையருக்கும் மூன்று பதக்கங்கள் வழங்கப்பட்டன.
சென்னையில் நடந்த நிறைவு விழா குறித்த விளம்பரங்களில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்தன. விழா மேடையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம் பெற்றன.
நிறைவு விழாவில், கிரிக்கெட் வீரர் தோனி சிறப்பு விருந்தினராக பங்கேற்பதாக இருந்தது. அவர், அமெரிக்காவில் இருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால், அவர் பங்கேற்கவில்லை .சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆர்கடி டுவர்கோவிச், துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த், இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இயக்குனர் பரத்சிங் சவுகான், சிறப்பு அலுவலர் தாரேஸ் அகமது உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
போட்டியை சிறப்பாக ஒருங்கிணைத்த தலைமை செயலர் இறையன்பு, விளையாட்டுத் துறை செயலர் அபூர்வா, தி.மு.க., - எம்.பி., ஆ.ராசா, விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், எம்.எல்.ஏ., உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.போட்டியில் வெற்றி பெற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
சென்னையைச் சேர்ந்த செஸ் வீரர்கள் டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா, இந்திய வீராங்கனை தானியா சச்தே, திவ்யா தேஷ்முக் உள்ளிட்டோருக்கு, மேடையில் பதக்கங்கள் வழங்கப் பட்டன.செஸ் ஒலிம்பியாட் தொடரின் 'ஸ்டைலிஷ்' அணிகளாக டென்மார்க் மகளிர் அணியும், மங்கோலியா ஆண்கள் அணியும் தேர்வு செய்யப்பட்டன.
இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டர் பட்டம் பெற்ற, சென்னையைச் சேர்ந்த, 86 வயதான 'கிராண்ட் மாஸ்டர்' மானுவல் ஆரோனை முதல்வர் கவுரவித்தார்.மேடையில் நிகழ்த்தப்பட்ட வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளில், தமிழர்களின் வீரக் கதைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன; வெளிநாட்டு வீரர்கள் ரசித்தனர்.
நான்கு மாதங்களில் சிறப்பான ஏற்பாடுகளை செய்ததற்காக, செஸ் கூட்டமைப்புகளையும், தமிழக அரசையும் அனைவரும் பாராட்டினர்.செஸ் ஒலிம்பியாட் நாயகனான குதிரை முகத்துடன், தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து வணங்கி வரவேற்ற 'தம்பி' பொம்மை, அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றது. போட்டி துவங்கும் முன் பிரதமர் ஏற்றிய ஒலிம்பியாட் சுடர், போட்டியின் இறுதி நாளான நேற்று போட்டிகள் நிறைவுபெற்றதும் அணைக்கப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பிரதமர் மோடி, செஸ் கட்டங்கள் வடிவிலான துண்டு, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார். முதல்வர் ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார். நேற்று நடந்த நிறைவு விழாவில், முதல்வர் ஸ்டாலின் கறுப்பு நிற 'கோட் சூட்' அணிந்து வந்திருந்தார்.