திருப்பூர்:ரயில் டிக்கெட் பரிசோதனைக்கு புது மின்னணு கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காகித தேவை மற்றும் பயன்பாட்டை குறைக்கும் வகையிலான திட்டங்கள் ரயில்வேயில் முன்னெடுக்கப்படுகின்றன.டிக்கெட் பரிசோதனைக்கு 'ஹேண்ட் ஹெல்ட் டெர்மினல்' என்ற மின்னணு கருவி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இது 'டேப்லெட்' கம்ப்யூட்டர் போன்றது.
தெற்கு ரயில்வேக்கு மொத்தம் 857 கருவிகள் தருவிக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 185 ரயில்களில் இக்கருவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட கோவை - சென்னை சேரன் எக்ஸ்பிரசில் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கருவி வழங்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:இனிமேல் டிக்கெட் பரிசோதனைக்கு காகிதங்கள் தேவைப்படாது. முன்பதிவு செய்தவரில் யார் பயணிக்கவில்லை என்ற விபரம் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய முடியும்.டிக்கெட் உறுதி செய்யப்பட்டு படுக்கை கிடைக்காத பயணிகளுக்கு வரிசைப்படி வெளிப்படையாக படுக்கையை ஒதுக்கவும் முடியும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.