நாகப்பட்டினம்: நாகூர் தர்காவில் மொஹரம் பண்டிகை, தொழுகை நடத்துவதில், இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், யாத்ரீகர்கள் குழப்பமடைந்தனர்.
நாகை அடுத்த நாகூர் தர்கா புதிய நிர்வாகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடால், மொஹரம் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்துவதில் பிரச்னை எழுந்தது.பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் தொழுகை நடத்துவது குறித்து, தர்கா நிர்வாகிகளில் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப், நாகை, ஆர்.டி.ஓ.,விடம் புகார் மனு அளித்தார்.இரு தரப்பினருக்கு இடையே, ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில், தர்காவின் பராம்பரியத்தை பாதுகாக்கவும், தர்காவின் உட்புறத்தில் வழிபாடு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகள் சார்பில், மொஹரம் தொழுகை ரத்து செய்யப்படுவதாக, தர்கா வளாகத்தில் துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது.இதனால் பரபரப்பு ஏற்பட்டதால் தர்காவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில் டிரஸ்டிகளில் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப் தலைமையில், தர்காவின் உட்புறம் உள்ள யாஹூசைன் பள்ளிவாசலில் மொஹரம் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தர்கா புதிய நிர்வாகிகள் கருத்து வேறுபாடால் வெளியூரில் இருந்து மொஹரம் சிறப்பு தொழுகையில் பங்கேற்க வந்த யாத்ரீகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.