சென்னை:சென்னை, அய்யப்பன்தாங்கல் அருகே, ஓட்டுனரை தாக்கி விரட்டி, காருடன் பெண்ணை கடத்திச் சென்று, கத்தி முனையில் கூட்டு பலாத்காரம் செய்த நான்கு பேர் கும்பலிடம் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூரைச் சேர்ந்த, 40 வயது பெண் ஒருவர், நேற்று முன்தினம் (ஆக.,08)இரவு, சொந்த காரில் அய்யப்பன்தாங்கலில் இருந்து கொளுத்துவாஞ்சேரிக்கு சென்றார்; காரை டிரைவர் ஓட்டினார். அந்த காரை வழி மறித்த மர்ம கும்பல், கத்தி முனையில் கார் ஓட்டுனரை சரமாரியாக தாக்கி விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. பின், காரில் அமர்ந்திருந்த பெண்ணை, காரோடு கடத்திச் சென்றது. பின், கொளுத்துவாஞ்சேரி பகுதியில் உள்ள காலி இடத்தில் வைத்து, அந்த பெண்ணை கத்தி முனையில், நான்கு பேரும் கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.அதே போல், அப்பெண்ணின் 8 சவரன் நகையை அக்கும்பல் பறித்து தப்பியது.
இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண், போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரித்த போரூர் போலீசார், பெண்ணை கத்தி முனையில் கூட்டு பலாத்காரம் செய்தது தொடர்பாக, நான்கு பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்பு இல்லை
அய்யப்பன்தாங்கல், கொளுத்துவாஞ்சேரி பகுதியில், கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரால், அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. ரவுடிகளாக வலம் வரும் கஞ்சா போதை ஆசாமிகள், இரவு வேளைகளில், வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், குழந்தைகள், பெண்கள் என, அனைவரும் இரவு வேளைகளில், வீட்டில் இருந்து வெளியே வர அச்சப்படுகின்றனர்.
- பகுதி மக்கள், கொளுத்துவாஞ்சேரி.