சென்னை:சென்னை, மதுரவாயலில் இம்மாதம் 1ம் தேதி நடந்த கூட்டத்தில், ஹிந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் பங்கேற்றார்.
'ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள ஈ.வெ.ரா., சிலையை உடைத்து அகற்றும் நாள் தான் ஹிந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும்' என, அவர் பேசினார். இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலர் குமரன் புகார் அளித்தார்.
இதையடுத்து, இரு பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த நிலையில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி, கனல் கண்ணன் தாக்கல் செய்த மனு, நீதிபதி எஸ்.அல்லி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க, அரசு தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்று விசாரணையை, இன்று நீதிபதி தள்ளிவைத்தார்.