ஜனாதிபதி திரவுபதி முர்மு, தன் அதிகாரப்பூர்வ புகைப்படத்தை தேர்ந்தெடுத்து ஒப்புதல் அளித்துள்ளார்.ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அதிமுக்கியப் பதவி வகிப்பவர்களின் புகைப்படங்கள் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள், துணை தூதரங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வைக்கப்படுவது மரபு.இதற்காக, பிரத்யேகமாக 'போட்டோ ஷூட்' நடத்தப்படும். பல்வேறு கோணங்களில் வெவ்வேறு உடைகளில் பல புகைப்படங்கள் எடுக்கப்படும். அவற்றில் ஒன்றை அந்த தலைவர்கள் தேர்ந்தெடுப்பர்.
அந்த வகையில், திரவுபதி முர்முவுக்கான போட்டோ ஷூட், ஜனாதிபதி மாளிகையில் மூன்று பிரபல புகைப்படக் கலைஞர்களை வைத்து நடத்தப்பட்டது. அவர்கள் எடுத்த சிறந்த 32 புகைப்படங்கள் திரவுபதி முர்முவிடம் அளிக்கப்பட்டன.அவற்றிலிருந்து, ஓர் அதிகாரப்பூர்வ புகைப்படத்தை திரவுபதி முர்மு தேர்ந்தெடுத்தார்.
அதில், ஜனாதிபதி முர்மு வெள்ளை நிறத்துடன் கூடிய பரிஹிதா ரக நீண்ட ரவிக்கை, சிவப்பு பார்டருடன் கூடிய வெண்ணிற சம்பல்புரி புடவை அணிந்து, எளிமையின் வடிவாக காட்சியளிக்கிறார்.இனி இந்தப் புகைப்படமே வரும் ஐந்து ஆண்டுகளுக்கு, நாடு முழுதும் உள்ள அனைத்து அரசியலமைப்பு அலுவலகங்கள், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் உள்ளிட்ட முக்கியஇடங்களில் இடம்பெறும். - நமது சிறப்பு நிருபர் -