தண்டராம்பட்டு:திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த அரடாப்பட்டையைச் சேர்ந்தவர் பூபாலன், 37; இவரது மனைவி சுகன்யா, 28; இவர்களது மகள் ரித்திகா, 6. இவர், பார்க்க தந்தை பூபாலனை போலவே இருப்பார்.
பூபாலனுக்கும், சுகன்யாவிற்கும், தகராறு ஏற்படுவது வழக்கம். எப்போதெல்லாம் தம்பதிக்குள் தகராறு நடக்கிறதோ, அப்போதெல்லாம் மகள் ரித்திகாவை, சுகன்யா அடித்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டபோது, ரித்திகாவை, சுகன்யா தாக்கினார். மயக்கமடைந்த ரித்திகாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தார். வெறையூர் போலீசில் பூபாலன் அளித்த புகாரில் வழக்குப்பதிந்த போலீசார், கொடூர தாய் சுகன்யாவை கைது செய்தனர்.