செய்திகள் சில வரிகளில் ஈரோடு

Added : ஆக 11, 2022 | |
Advertisement
கருப்பண்ண சுவாமி கோவிலில் பொங்கல் விழா ஈரோடு: ஈரோடு பெரியார் நகர் பொய்யேரி கரை கருப்பண்ணசுவாமி கோவில், பொங்கல் விழா துவக்கமாக, பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கருப்பண்ணசுவாமிக்கும், கன்னிமார் சுவாமிகளுக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா நேற்று நடந்தது. ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த திரளான

கருப்பண்ண சுவாமி
கோவிலில் பொங்கல் விழா
ஈரோடு: ஈரோடு பெரியார் நகர் பொய்யேரி கரை கருப்பண்ணசுவாமி கோவில், பொங்கல் விழா துவக்கமாக, பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கருப்பண்ணசுவாமிக்கும், கன்னிமார் சுவாமிகளுக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா நேற்று நடந்தது. ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த திரளான மக்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து சக்தி பஞ்சமுக கணபதி, கன்னிமார் சுவாமிகள், ஏரி கருப்பராயனுக்கு அபிஷேகமும், மதியம் உச்சிகால பூஜை நடந்தது. முனியப்ப சுவாமிக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

32 வீடுகள் ஒதுக்கீடு: போலீசார்
குலுக்கல் முறையில் தேர்வு
ஈரோடு: பெருந்துறை போலீஸ் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று நடந்தது. கடந்த, 8ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின்,32 வீடுகள் அடங்கிய பெருந்துறை போலீஸ் குடியிருப்பை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். வீடு கோரி போலீசார் ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தனர். இதில் தகுதியுடைய போலீசாருக்கு வீடு ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி ஈரோடு எஸ்.பி, அலுவலகத்தில் நேற்று நடந்தது. வீடு கோரி விண்ணப்பித்து இருந்த போலீசார் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கூடுதல் எஸ்.பி., பால முருகன் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் யோக நாதன் முன்னிலை வகித்தார். இதில் தங்களுக்கான வீடுகளை போலீசாரே குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர்.

நேற்று 56 பேருக்கு கொரோனா
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 56 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதேநேரம், நேற்று, 64 பேர் சிகிச்சையை நிறைவு செய்து குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது, 363 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.

ஆவணி அவிட்டம்: பூணுால்
அணிதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
ஈரோடு: ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் பூணுால் அணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பூணுால் அணிவித்தல் நிகழ்ச்சி அதாவது ஆவணி அவிட்டம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோடு காரை வாய்க்கால் சுயம்பு நாகர் கோவிலில் விஸ்வகர்மா சமுதாயம் சார்பில் இன்று காலை, 5:30 மணி முதல் காயத்ரி யக்ஞ ஹோமம் நடக்கிறது. பின்னர் பூணுால் அணிதல் நிகழ்ச்சி, அன்னதானம் நடக்கிறது. ஈரோடு அக்ரஹார வீதியில் உள்ள பெருமாளய்யன் கோவிலில் காலை, 7:00 மணிக்கு பூணுால் அணிதல் நிகழ்ச்சி நடக்கிறது.

சமுதாய விழிப்புணர்வு யாத்திரை
ஈரோடு: சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஈரோட்டில், பா.ஜ. சார்பில் சமுதாய விழிப்புணர்வு யாத்திரை நேற்று நடந்தது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஈரோடு பா.ஜ., சார்பில் அமிர்த உற்சவம் என்ற சமுதாய விழிப்புணர்வு யாத்திரை ஈரோடு நாடார்மேடு பகுதியில் நடந்தது. கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.,யுமான சவுந்திரம் தலைமை வகித்தார். மொத்தம், 12 வாகனங்களில் பா.ஜ.வினர் தேசிய கொடிகளை கைகளில் ஏந்தியபடி சென்றனர். ஈரோட்டில் துவங்கி ஆனைக்கல்பாளையம், மொடக்குறிச்சி, லக்காபுரம், சோளங்காபாளையம், சாவடிபாளையம் கணபதிபாளையம், சோலார் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது. அப்போது தேசிய உணர்வு, சுதந்திர போராட்டத்துக்கான தியாகங்கள், மறைந்த சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவு கூறப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் அணி மாநில பொதுச செயலாளர் மோகனபிரியா, மாவட்ட தலைவர் புனிதம் அய்யப்பன், பட்டியலின மாநில செயலாளர் அய்யாசாமி, மாவட்ட தலைவர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தாராபுரம்: தாராபுரம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நேற்று மதியம், 3:00 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சத்துணவு ஊழியர்கள் சங்க நிர்வாகி பார்வதி தலைமை தாங்கினார். பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த கோரியும், சத்துணவு ஊழியர்களே, தயாரித்து வழங்க வலியுறுத்தியும் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

காங்., சார்பில் நடைபயணம்
ஈரோடு: ஈரோடு மாநகர மாவட்ட காங்., சார்பில், சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு சத்தியாகிரஹ நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மாலை, ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே இருந்து மாநகர மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வன் தலைமையில் நடைபயணத்தை துவக்கினர். முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட துணை தலைவர் ராஜேஷ்ராஜப்பா, மண்டல தலைவர் விஜயபாஸ்கர், பாஷா உட்பட பலர் பங்கேற்றனர். சுதந்திர போராட்ட வரலாறு, அதில் காங்., கட்சியின் பங்கு, சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கொள்வது தொடர்பாக பலரும் பேசி, நடைபயணத்தை தொடர்ந்தனர்.
*காங்., கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் பாதயாத்திரை துவங்கியது. புன்செய் புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் தேசிய கொடியை ஏந்தி பாத யாத்திரை சென்றனர்.திரளான காங்கிரஸ் கட்சியினரும் பாதயாத்திரையில் பங்கேற்றனர். 3 நாள் நடக்கும் இந்த பாதயாத்திரை 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்து நிறைவடைகிறது.

கோபி சட்டசபை தொகுதியில்
அனைத்து கட்சி கூட்டம்
கோபி: கோபி சட்டசபை தொகுதியின், அனைத்து கட்சியினருக்கான கூட்டம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ஆசியா தலைமையில் நேற்று நடந்தது. வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், சுருக்கத்திருத்தம், முகவரி மாற்றம், புதிய ஓட்டுச்சாவடி அமைத்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

சாலையில் முறிந்து விழுந்த மூங்கில்
மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆசனுார் காரப்பள்ளம் சோதனை சாவடிக்கு அருகில் நேற்று மதியம், 2:30 மணியளவில் சாலையோரத்தில் இருந்த மூங்கில் மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் தமிழக- கர்நாடக எல்லை பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர். நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். மாலை, 6:00 மணியளவில் மீண்டும் போக்குவரத்து சீரானது.


வயது முதிர்வால்
ஆண் யானை சாவு
அந்தியூர், ஆக. 11-
அந்தியூர் அடுத்த சென்னம்பட்டி வனச்சரத்திற்கு உட்பட்ட பகுதியில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜர்த்தல் பீட் பகுதியில், ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. மாவட்ட வன அலுவலர் உத்தரவின் படி சம்பவ இடத்தில் கால்நடை மருத்துவ குழுவினர், உடற்கூறு ஆய்வு செய்தனர். கால்நடை மருத்துவர் கூறியதாவது, 'இறந்த ஆண் யானைக்கு, 40 வயது இருக்கக்கூடும். வயது முதுவின் காரணமாக யானை உயிரிழந்திருக்க கூடும்' என தெரிவித்துள்ளார். யானையின் உடலில் இருந்த இரண்டு தந்தங்களை கைப்பற்றினர்.
யானையின் உடல் மற்ற உயிரினங்களுக்கு இறையாக விட்டு சென்றனர்.


பா.ஜ., கொடியேற்று விழா
தாராபுரம்: தாராபுரத்தில், பா.ஜ., கொடியேற்று விழா நடந்தது. தாராபுரம், நகர பா.ஜ., தலைவர் செந்தில்தாஸ், தலைமையில், பொதுச் செயலாளர் கதிர்வேல், மூத்த நிர்வாகி தர்மராஜ் முன்னிலையில் நடந்தது.
கணவர் இறந்த துக்கம்: மனைவி, மகன்
தற்கொலை முயற்சி
கோபி, ஆக. 11-
கணவர் இறந்த துக்கத்தால், மனைவி தனது மகனுடன் தற்கொலைக்கு முயன்றார்.
கோபி அருகே, குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன், 56; ஸ்பின்னிங் மில் தொழிலாளி. இவர் ஒரு மாதத்துக்கு முன், ஏற்பட்ட விபத்தால், வேலைக்கு செல்ல முடியாமல், வீட்டிலிருந்து வந்தார்.
இதனால், வாங்கிய கடனை கட்ட முடியாமல், நேற்று முன்தினம், விஷ மாத்திரையை சாப்பிட்டு, வடக்கு பார்க் வீதியில் உள்ள பூங்காவில், லோகநாதன் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, நேற்று இறந்தார்.
கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாத லோகநாதனின் மனைவி பத்மாவதி, 40, தனது மகன் விக்னேசுடன் விஷ மாத்திரையை சாப்பிட்டு, வீட்டில் மயங்கி கிடந்தனர். அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X