மும்பை : அமெரிக்க பணவீக்கம், டாலர் மதிப்பு சரிவு காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று எழுச்சியுடன் துவங்கியது.
இன்றைய (ஆக.,11) வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 580 புள்ளிகள் உயர்ந்து, 59,402 புள்ளிகளுடன், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 161 புள்ளிகள் உயர்ந்து,17,696 புள்ளிகளுடன் துவங்கியது. டெக் மஹிந்திரா, விப்ரோ, ஐ.சி.ஐ.சி ஐ வங்கி, இன்ஃபோசிஸ் நிறுவனங்களின் பங்குகள் உயர்வு கண்டன. அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், எஸ்.பி.ஐ லைப் இன்சூரன்ஸ் பங்குகள் சரிவு கண்டன. பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் 1 சதவீதமும், ஐ.டி நிறுவன பங்குகள் 2 சதவீதம் உயர்வை கண்டன.
காலை 10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 594 புள்ளிகளும், நிஃப்டி 158 புள்ளிகள் எழுச்சியுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
பங்குச்சந்தைகள் எழுச்சிக்கு காரணம் :
அமெரிக்காவில் பணவீக்கம் ஜூனில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வை கண்ட நிலையில், எரிபொருள் விலை குறைவால், ஜூலையில் 8.5 சதவீதமாக குறைந்தது பங்குச்சந்தைகளின் எழுச்சிக்கு முக்கிய காரணமாகும். இதன் காரணமாக அமெரிக்க பங்குச்சந்தைகள் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வுடன் துவங்கின. இதன் தாக்கம் ஆசிய பங்குச்சந்தையில் எதிரொலித்துள்ளது.
![]()
|
ரூபாய் மதிப்பு உயர்வு :
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில், 38 காசுகள் அதிகரித்து, ரூ. 79.25 ஆக இருந்தது.
இந்திய பங்குச்சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று (ஆக.10) ரூ.1,061.88 கோடியை, முதலீடு செய்துள்ளனர்.