தி.மு.க., மாவட்ட செயலர் தேர்தல் முடிவடையாததால், வரும் 28ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த பொதுக்குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. செப்., 15ல், விருதுநகரில் நடக்கும் முப்பெரும் விழாவுக்கு பின், நடத்த ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க.,வில் ஒன்றிய செயலர், நகர செயலர் தேர்தல் முடிவடைந்த பின், தற்போது, மாநகராட்சி வட்ட செயலர், பகுதி செயலர் தேர்தல் நடந்து வருகிறது. மாவட்ட செயலர் தேர்தல் இன்னும் துவங்கவில்லை.சென்னையில் உள்ள மாவட்டங்களில், இன்னும் பகுதி செயலர் தேர்தல் துவங்கவில்லை. வரும் 15ம் தேதி, சுதந்திர தின விழா கொண்டாட்டம் முடிந்த பின், மாவட்ட செயலர் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மாவட்ட செயலர் தேர்தல் பத்து நாட்கள் வரை நீடிக்கும் என்பதால், வரும் 28ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதற்கிடையில், அண்ணாதுரை பிறந்த நாள், ஈ.வெ.ராமசாமி பிறந்த நாள், தி.மு.க., துவங்கிய நாள் என, முப்பெரும் விழாவை, செப்., 15ல் விருதுநகரில் நடத்த, ஆளும் கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.
இந்த விழாவில், கட்சியின் முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர் பட்டியல் தயாராகி வருகிறது. முப்பெரும் விழா நடப்பதற்கு முன், செப்., முதல் வாரத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தலாமா அல்லது மூன்றாவது வாரத்தில் நடத்தலாமா என்பது குறித்து, தி.மு.க., மேலிடம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. - நமது நிருபர் -