கரூர்:கரூரில் கழிவு நீரை அகற்றாமல், அதன் மீதே கான்கிரீட் கலவை கொட்டி கால்வாய் அமைக்கப்பட்ட இடத்தை, மேயர் ஆய்வு செய்ய சென்றார். அங்கு செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை, தி.மு.க., பிரமுகர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாநகராட்சி, 1வது வார்டு, கே.ஏ.,நகரில் கழிவு நீரை அகற்றாமல், அதன் மீதே கான்கிரீட் கலவையை கொட்டி, கால்வாய் அமைப்பதாக, நேற்று முன்தினம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, 1வது மண்டல குழு தலைவர் சக்திவேல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கால்வாய் அமைக்கப்பட்ட இடத்தை பார்வையிட சென்றனர்.
அப்போது, தி.மு.க., பிரமுகர் மாரப்பன், 55, 'தேவையில்லாமல் செய்தி வெளியிட்டால், நல்லா இருக்காது' என, நிருபர்களை மிரட்டினார்.நிருபர்களுக்கும், மாரப்பனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சுதாரித்த, 1வது மண்டல குழு தலைவர் சக்திவேல், தி.மு.க., பிரமுகர் மாரப்பனை உடனடியாக அங்கிருந்து அழைத்துச் சென்றார்.
கடந்த, 11ல் திருச்சி மாவட்டம், தளுதாளப்பட்டி பஞ்சாயத்து, தி.மு.க., கவுன்சிலர் நித்யாவின் கணவர் வெற்றிச்செல்வன், 47, அரிவாளால் சிலரை தாக்க முயன்றார். தற்போது, கரூரில் மேயர் கவிதா ஆய்வுக்கு சென்ற நிகழ்வை, செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை, தி.மு.க., பிரமுகர் மாரப்பன் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.