திண்டிவனம்:அரவிந்தரின் 150வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது அறையை ஆக.15ம் தேதி தரிசனம் செய்யலாம்.
அரவிந்தர் என அழைக்கப்படும் அரபிந்தோ கோஷ் கடந்த 1872ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். சுதந்திர போராட்ட வீரராக திகழ்ந்து, அதன் பின், ஆன்மிகத்தை தழுவினார்.
இவருடன் அன்னை என அழைக்கப்படும் மீரா அல்பாசும் அரவிந்தரின் ஆன்மிக கடமைகளை இணைந்து செயலாக்கம் செய்தார். அரவிந்தர் 1950ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி 78 வயதில் சித்தியடைந்தார்.புதுச்சேரி ஒயிட் டவுன் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில், அரவிந்தர் பயன்படுத்திய அறையை தரிசனம் செய்ய பார்வையாளர்களுக்கு ஆண்டுக்கு 6 முறை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு அரவிந்தரின் 150வது பிறந்த நாளையொட்டி அரவிந்தர் ஆசிரமம், ஆக.15 தேதி சுதந்திர தினத்தன்று அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டு, 6:00 மணிக்கு தியான நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து அரவிந்தர் வாழ்ந்த அறையை மாலை 6:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.அதேபோல் ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள மாத்திர் மந்திரில் கூட்டு தியானமும், ஆம்பி தியேட்டரில் அதிகாலை 4:30 மணியிலிருந்து 6:30 மணி வரை போன் பயர் நிகழ்ச்சியும் நடக்கிறது.