சென்னை: ரயில்வேயில் இருப்பது போல், அனைத்து மெட்ரோ ரயில்களிலும் ஒரே மாதிரியான கட்டண முறையை விரைவில் கொண்டு வர, மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முன்னாள் திட்ட இயக்குனர் ராமநாதன் கூறியதாவது: தற்போது, சென்னை உள்பட 20 நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், 19 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.இருப்பினும், மெட்ரோ ரயில் கட்டணத்தில் பல்வேறு முரண்பாடு இருப்பதாக பயணியர் புகார் தெரிவித்து வருகின்றனர்.கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்து ஆலோசனை நடத்தி வருகிறது.

இதில், அனைத்து மெட்ரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் உறுப்பினர்களாக இருந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். எனவே, ரயில்வேயில் இருப்பது போல், கிலோ மீட்டர் துாரத்தை கணக்கிட்டு, அனைத்து மெட்ரோ ரயில் நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. பெரிய நகரங்களுக்கு ஒரு வகையான கட்டணமும், சிறிய நகரங்களுக்கு சற்று குறைவான கட்டண முறையையும் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.