சென்னை: நம் நாளிதழ் செய்தியை அடுத்து, ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு, ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதார்களுக்கு, 2021 மே, ஜூன் மாதங்களில், கொரோனா நிவாரணமாக தலா, 4,000 ரூபாயும், 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கியது. இதனால், ரேஷன் ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டது.எனவே, ஊழியர்களுக்கு கார்டுக்கு தலா, 50 காசு ஊக்கத்தொகை வழங்குமாறு, ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டது.
ஓராண்டுக்கு மேல் ஆகியும், இதுவரை பல சங்கங்களில் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, ரேஷன் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை விபர அறிக்கையை அனுப்பி வைக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.