கோவை: பிரான்ஸ் விமானப்படை அணியினர், கோவை மாவட்டம் சூலுார் விமான தளத்துக்கு வந்தனர்.ஐரோப்பிய நாடான பிரான்ஸ்க்கு சொந்தமான தீவுக்கூட்டங்கள், பசிபிக் கடலில் அமைந்துள்ளன. இவற்றில் நியூ கலிடோனியா தீவும் ஒன்று. இந்த தீவில் பிரான்ஸ் விமானப்படை தளம் அமைந்துள்ளது.
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் விமானப்படையின் திறனை பரிசோதிக்க எண்ணிய பிரெஞ்சு ராணுவம், தங்கள் நாட்டு விமானப்படை அணியினரை, 72 மணி நேரத்தில் நியூ கலிடோனியா தீவுக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, 16 ஆயிரத்து 600 கி.மீ., அப்பால் இருக்கும் தீவுக்கு புறப்பட்ட பிரெஞ்சு விமானப்படை அணியினர், எரிபொருள் நிரப்புவதற்காக கோவை மாவட்டம், சூலுார் விமானதளத்தில் தரை இறங்கினர்.
இந்த படை அணியில், மூன்று ரபேல் போர் விமானங்களும், ஒரு சரக்கு விமானமும் இடம்பெற்றிருந்தன. ஆக.,10ல் சூலுாரில்தரை இறங்கிய விமானங்கள், எரிபொருள் நிரப்பிய நிலையில் மறுநாள் அதிகாலை நியூ கலிடோனியாவுக்கு புறப்பட்டன.'இந்த செயல்பாட்டின் வாயிலாக, இந்தியா - பிரான்ஸ் விமானப்படையினர் இடையிலான பரஸ்பர நல்லுறவு வெளிப்பட்டது; இரு நாட்டு படையினரும் ரபேல் விமானங்களை பயன்படுத்துவதால் நல்லுறவு மேலும் வலுப்பட்டுள்ளது' என, பிரான்ஸ் துாதரகம் தெரிவித்துள்ளது.ஆஸ்திரேலியாவில் ஆக.,17 முதல் செப்.,10 வரை நடக்கும் போர்ப்பயிற்சியில், இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டு விமானப்படையினர் பங்கேற்க உள்ளனர்.