பிளவுபடுத்துவோரை வெல்ல வேண்டிய நேரம் இது! ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் உரை

Added : ஆக 13, 2022 | |
Advertisement
-நாளை, நமக்கு 75ம் ஆண்டு சுதந்திர தின விழா. விடுதலையின், 75 ஆண்டு நிறைவை ஒட்டிய, 'அம்ருத் மகோத்ஸவ்' - அமுதவிழா கொண்டாட்டம், ஏற்கனவே துவங்கி விட்டது; ஆண்டு முழுதும் தொடர்ந்து கொண்டாடப்படவுள்ளது. பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டோம்; இன்னும் சில உள்ளன; புதிதாகவும் வந்துள்ளன.சும்மா கிடைத்துவிடவில்லை சுதந்திரம். இளைய தலைமுறைக்கு, 'சுதந்திரம்' என்ற நிகழ்வே

-நாளை, நமக்கு 75ம் ஆண்டு சுதந்திர தின விழா. விடுதலையின், 75 ஆண்டு நிறைவை ஒட்டிய, 'அம்ருத் மகோத்ஸவ்' - அமுதவிழா கொண்டாட்டம், ஏற்கனவே துவங்கி விட்டது; ஆண்டு முழுதும் தொடர்ந்து கொண்டாடப்படவுள்ளது.

பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டோம்; இன்னும் சில உள்ளன; புதிதாகவும் வந்துள்ளன.சும்மா கிடைத்துவிடவில்லை சுதந்திரம். இளைய தலைமுறைக்கு, 'சுதந்திரம்' என்ற நிகழ்வே தெரிந்திருக்காது. நாம் எப்படியெல்லாம், ஆங்கிலேயேரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தோம் என்று தெரியாது.அவர்களின் செருப்பை நக்குவது, அவர்களிடம் கசையடி வாங்குவது உட்பட, வெளியில் சொல்ல ஒண்ணா துயரங்களை அனுபவித்தோம்.

கொடுந்துயரிலிருந்து நம்மை மீட்க, சிரித்தபடியே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அனைவரையும் நினைவு கூர்வதுடன், அவர்களது தியாகத்தையும் போற்ற வேண்டும்.நாட்டின் நலனுக்காகத் தங்கள் உடைமைகள் அனைத்தையும் தியாகம் செய்வதற்கு முன்வந்த அவர்களது உறுதி மற்றும் புகழொளி வீசும் அவர்களது தியாக மயமான வரலாறு ஆகியவற்றை, லட்சிய முன்மாதிரியாகக் கொண்டு நாம் நினைவுகூர்ந்து செயலாற்ற வேண்டும்.


அத்துடன் இந்தத் தருணத்தில், நாம் நம் நோக்கம், லட்சியம் மற்றும் கடமையை நினைவுகூர்ந்து, அவற்றை நிறைவேற்றுவதற்காக, மேலும் திடமானவர்களாகவும், செயலுறுதி கொண்டவர்களாகவும் ஆக வேண்டும்.


நாட்டுக்கு ஏன் சுய ராஜ்ஜியம் தேவை... நல்லாட்சிக்காக மட்டுமே என்றால், அதை வேறு எந்த அன்னிய அரசாட்சியாலும் தந்து விட முடியாதா... நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் இதனால் பயன் ஏற்பட்டு விடாதா... அவ்வாறு நடக்க சாத்தியமில்லை என்பதை, சற்றும் சந்தேகத்துக்கு இடமின்றி அறிவோம்


இப்போது!சுயம் என்ற உணர்வு, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மற்றும் சமூகத்துக்கும் இயல்பாக எழுகின்ற லட்சியம். விடுதலைக்கான உந்து சக்தி அது. சுதந்திரத்தில் மட்டும் தான், மனிதர்கள் நல்லாட்சிக்கான அனுபவத்தைப் பெறமுடியும், வேறு வகையில் பெற முடியாது.


'ஒவ்வொரு நாட்டின் எழுச்சியும், உலக அரங்கில் ஏதோவொரு பங்களிப்பைத் தருவதற்காகவே அமைகிறது' என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். உலகிலும், தன் வாழ்விலும், தன் சுயத்தின் வெளிப்பாடு மூலமாகவே அந்த நாடு, உலக அரங்கில் தன் பங்களிப்பைத் தரும் கடமையை நிறைவேற்ற முடிகிறது.


அந்தப் பங்களிப்பைத் தரும் நாடு சுதந்திரமாக இருப்பது, பங்களிப்புக்கான முதல் நிபந்தனை.இந்தியாவின் சுதந்திரத்துக்காக, இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்களும், விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் பாதையையோ அல்லது அகிம்சை வழியையோ தேர்ந்தெடுத்து, துடிப்புடன் செயலாற்றியவர்களின் பெருமைகள் பல விதங்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.அமரகவி ரவீந்திரநாத் தாகூர் தன், 'எங்கே மனமானது அச்சமற்று, தலைநிமிர்ந்து நிற்கிறதோ...' என்ற புகழ்பெற்ற பாடலில், சுதந்திர இந்தியாவின் லட்சிய சூழலைப் பற்றி வர்ணனை செய்து உள்ளார்.


சுதந்திரப் போராட்டத் தலைவர் வீர சாவர்க்கர், 'சுதந்திர தேவிக்கான ஆரத்தி' என்ற தன் பிரபல கவிதையில், 'சுதந்திர தேவி எழுந்தருளும்போது, அத்துடன் இணைந்த எண்ணங்களான, மேன்மை, வளர்ச்சி, உயர்வு ஆகியவை இயல்பாகவே இந்தியாவில் நிகழும்...' என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.


மகாத்மா காந்தி, அவரது 'ஹிந்து ஸ்வராஜ்' என்ற நுாலில், சுதந்திர பாரதம் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தை விவரித்துள்ளார். டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கரும், நாட்டின் அரசியல் சாசனத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது நிகழ்த்திய இரண்டு சிறப்புரைகளில், இந்தியா பெற்றுள்ள சுதந்திரத்தின் நன்மை மற்றும் விடுதலையுற்ற நமக்கு முன்னேயுள்ள கடமைகள் ஆகியவற்றை, சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் எடுத்துரைத்துள்ளார். ஆகையால், நம் சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவில், உளப்பூர்வமாக ஆழ்ந்து சிந்தித்து, சில கேள்விகளுக்கான விடைகளையும் ஆராய வேண்டும்...


* நம் வாழ்வில் சுயத்தின் வெளிப்பாடாக, சுதந்திரத்தின் நோக்கம் அமைந்துள்ளது என்றால், நம் சுயம் எது?


* உலக அரங்கில் நம் பங்களிப்பு, எந்த வகையில் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும்? இதை செயலாற்றுவதற்கு நமக்குள்ள கடமைகள் என்ன? அதை நிர்வகிப்பதற்கு, சமுதாயத்தை எந்த வகையில் தயார்படுத்த வேண்டும்?


* சுதந்திரம் அடைந்ததற்கான லட்சியத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டோமா என, சிந்திக்க வேண்டும்.நம் பாரம்பரியம், கண்ணோட்டம், சிந்தனை, பண்பாடு, வாழ்வியல் முறை ஆகியவற்றின் மூலம், அறிவியல் பூர்வமான உண்மையின் அடிப்படையில் அமைந்த ஒற்றுமை, ஒருமைப்பாடு, இயல்பாக மற்றவரை அரவணைக்கும் போக்கு ஆகியவற்றை, உலகுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.


பன்முகத்தன்மையில் இருந்து விலகாமல், ஒற்றுமையை வெளிப்படுத்தி இருக்கிறோம். அனைவரையும் ஒன்றாக வர்ணமடித்தலும், தங்களது வேர்களில் இருந்து ஒருவரை விலகியிருக்கச் செய்தலும் சச்சரவுகளுக்கும், பிரிவினைக்கும் வழிவகுக்கின்றன. தன் தனித்தன்மையில் உறுதியாக இருத்தியபடியே, பிறரது தனித்தன்மைகளையும் மதிக்கும் போக்கே, அனைவரையும் ஒற்றைக் கயிற்றில் பிணைத்து, ஒன்றுபட்ட சமுதாயம் என்ற வடிவில் நிற்கச் செய்கிறது.


பாரத அன்னை மீதான பக்தி, நாம் அனைவரும் அவளது குழந்தைகள் என்ற உறவால் இணைக்கிறது. நம் தொன்றுதொட்ட பண்பாடு, நம்மை துாய்மைப்படுத்தி, நல்லெண்ணம் மற்றும் உளப்பூர்வமான நன்னடத்தை குறித்த ஞானத்தைத் தருகிறது. மனத்தைத் துாய்மைப்படுத்துவதில் துவங்கி சுற்றுச்சூழல் வரையில் துாய்மையை அதிகரிப்பதற்கான அறிவையும் போதிக்கிறது. பண்டைய காலத்தில் இருந்தே நம் நினைவில் நடமாடும் வல்லமைமிக்க, ஒழுக்கசீலர்களான நம் முன்னோரின் லட்சியங்கள், நம்மை வழி நடத்துகின்றன.


நம் தனித்தன்மைகளோடு இந்தப் பொதுவான நிலைப்பாட்டை நாம் ஏற்று, குறுகிய சுயநலம் மற்றும் பிளவுபடுத்தும் எண்ணங்களை முழுமையாக கைவிட்டு, தேசநலனை மாத்திரமே நம் அனைத்துச் செயல்களுக்கான ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இந்த வடிவில் நிற்கச் செய்வது, காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல; சமுதாயத்தின் இயல்பான நிலையும் கூட.


நம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் தீமைகளாகிய நோய்கள்... ஜாதி, சமயம், மொழி, மாநிலம் போன்றவற்றால் எழுந்துள்ள வேற்றுமை எண்ணங்கள்... பதவியாசை, பொருளாசை போன்றவற்றால் எழும் அற்பமான சுயநலம் உள்ளிட்ட அனைத்தையும், நம் மனம், -சொல்,- செயலில் இருந்து முற்றிலுமாக துடைத்தெறிவதற்காக, விழிப்புணர்வுடன் கூடிய நன்னடத்தைக்கு முன்னுதாரணமாக நம்மை நாமே வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.


நாம் பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சக்தி, சமத்துவத்தைப் பேணும், சுரண்டலற்ற சமுதாயத்தில் மாத்திரமே உள்ளது.மக்கள் சமுதாயத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தி, அச்சுறுத்தி, தங்களுக்குள் சண்டையிடச் செய்வதுடன், தங்களது சுயநலத்தைப் பூர்த்தி செய்து கொள்ளும் குறுகிய புத்தி கொண்டவர்களும், தாங்கள் கொண்டுள்ள வெறுப்பு எனும் தீயிலே குளிர் காய விருப்பம் கொண்டு சதித்திட்டங்களைத் தீட்டும் தீயசக்திகளும், நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியில் இருந்தும் செயல்பட்டு வருகின்றனர்.


அத்தகையோருக்கு எள் முனையளவும் இடம் கொடுக்காத வகையில், ஆதரவளிக்காத வகையில் விழிப்புணர்வுடன், திறமையுடன், நன்கு கட்டமைக்கப்பட்ட சமுதாயமே ஆரோக்கியமான சமுதாயமாக இருக்க முடியும். தங்களுக்கிடையே நல்லெண்ணத்துடன், சமுதாயம் குறித்த தொடர்ச்சியான பரஸ்பர தொடர்பு, தொடர்ச்சியான பரஸ்பர உரையாடல்கள் ஆகியவற்றை மென்மேலும் வலுவாக நிறுவ வேண்டும்.


விடுதலையடைந்த, மக்களாட்சி நடைபெறும் நாட்டில், பொதுமக்கள் தங்களது பிரதிநிதிகளைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த நலன், வேட்பாளர்களின் தகுதி மற்றும் அரசியல் கட்சிகளின் கொள்கைகளை அலசி ஆராய்ந்து பார்க்கும் நுட்பமான அறிவு... சட்டம், அரசியல் சாசனம், குடிமக்களின் நடத்தை விதிகள் பற்றிய பொதுவான விழிப்புணர்வு மற்றும் அவற்றை உண்மையாகக் கடைப்பிடிக்கும் தன்மை... இவையெல்லாம் ஜனநாயகம் வெற்றி பெறுவதற்குத் தேவையான முதன்மை நிலைகள்.


ஆனால், அரசியல் வித்தைகளால், இதில் தொய்வு ஏற்பட்டு, நம்மை அச்சுறுத்துகிறது. விவாதங்களின்போது தங்களுடைய வீரத்தை நிலைநாட்டுவதற்காகத் தரமற்ற வார்த்தைகளை தொண்டை கிழியக் கத்துவதும் இதற்கு முக்கியக் காரணமாகும். சமூக ஊடகங்களில் இது ஒரு நடைமுறையாகவே மாறி விட்டது. கட்சித் தலைமை உட்பட நாம் அனைவருமே, இந்த நடைமுறையில் இருந்து விலகி, குடிமைப் பண்பொழுக்கத்தைப் பேணுதல் மற்றும் சட்டத்தின் மாட்சிமையை மதித்தல் ஆகியவற்றை நிலைநிறுத்தும் சூழலை உருவாக்க வேண்டும்.


தனிமனித ரீதியிலும், ஒட்டுமொத்த சமுதாய ரீதியிலும் இதற்கான தகுதியை உருவாக்கா விடில், எங்கேயும் எப்போதும் முன்னேற்றம் ஏற்பட்டு விடாது; வெற்றியும் கிடைக்காது. சுயத்தின் அடிப்படையில் தங்களது சுதந்திர நாட்டுக்கு, புதிய சகாப்தத்துக்கான வழிமுறைகளையும், நடைமுறையில் உள்ள அமைப்புகளும் நாட்டின் நலனுக்கு உகந்த வகையில் உருவாக்க வேண்டும் என்று கருதினால், சமுதாயத்தில் சுயம் குறித்த தெளிவான அறிவு, களங்கமற்ற தேசபக்தி, தனிநபர் மற்றும் தேசம் முழுமைக்குமான ஒழுக்கம் மற்றும் ஒருமைப்பாடு ஆகிய நானாவித திறன்கள் அவசியம்.


தியாக மனப்பான்மை மற்றும் கடின உழைப்புக்கு உறுதிபூண்டு, சுயத்தின் அடிப்படையில் புதிய சகாப்தத்தைப் படைப்பதற்கான வழிமுறையைக் கட்டமைப்பதன் மூலமாக, இந்தியாவை செழுமை மிகுந்த நாடாக உருவாக்க முடியும்! வாருங்கள்... அந்த தவப்பாதையில் மகிழ்ச்சியுடன் ஒருங்கிணைந்து, தெளிவான மற்றும் உறுதியான மனப்பான்மையுடன் நாம் வேகமாக முன்னேறிச் செல்வோம்! பிளவுபடுத்துவோரை வெல்ல வேண்டிய நேரம் இது!

டாக்டர் மோகன்ராவ் பாகவத்,

அகில இந்திய தலைவர்,


ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X