சென்னை :சென்னையில் பட்டபகலில், பெடரல் வங்கி கிளையில் புகுந்த கும்பல், காவலாளி, ஊழியர்களை கட்டிப் போட்டு, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள, 32 கிலோ நகைகளை கொள்ளை அடித்துள்ளது.
கஞ்சா, ஹெராயின், கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மையமாக மாறி வரும் தமிழகத்தில், வங்கி கொள்ளையரின் கைவரிசையும் தலைதுாக்கத் துவங்கி விட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.சென்னை அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியில், பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவான, 'பெட் பேங்க்' என்ற கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையின் மேலாளராக சுரேஷ், 38, என்பவர் உள்ளார்.
அலறல்
மேலும், நகை மதிப்பீட்டாளர், காசாளர், பெண் ஊழியர் என, மூன்று பேர் பணியில் இருந்தனர். நேற்று பிற்பகல் 3:00 மணியளவில், வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்கு வந்தார்.அப்போது கதவு, வெளிப்பக்கத்தில் தாழிடப்பட்டிருந்த நிலையில், வங்கி உள்ளே இருந்து அலறல் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர், கதவின் அருகே சென்றபோது, உள்ளிருந்து, 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என்ற சத்தம் கேட்டுள்ளது.தயக்கத்துடன் கதவை திறந்து உள்ளே சென்ற அவர், ஊழியர்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் இருந்ததை கண்டு, மேலும் அதிர்ச்சியடைந்தார். பின், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை எண், ௧௦௦க்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இத்தகவல் உடனடியாக அரும்பாக்கம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு, உதவி கமிஷனர் அருள் சந்தோஷம் முத்து ஆகியோர் தலைமையிலும் போலீசார், வங்கிக்கு வந்தனர். ஊழியர்களின் கட்டை அவிழ்த்து, விசாரணையை துவக்கினர்.விசாரணையில், இதே வங்கியின், வில்லிவாக்கம் கிளையில் பணியாற்றும் மண்டல மேலாளரான, பாடியைச் சேர்ந்த முருகன், 45, என்பவர் தான், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார் என்பது தெரிந்தது.சில மாதங்களுக்கு முன் முருகன், அரும்பாக்கம் கிளையில் மேலாளராக பணியாற்றியதால், நேற்று வங்கிக்கு வந்தபோது, ஊழியர்கள் அவரிடம் சகஜமாக பேசியுள்ளனர். அப்போது, தான் கொண்டு வந்திருந்த குளிர்பானத்தை, காவலாளி சரவணன், ஊழியர்களுக்கு கொடுத்துள்ளார். காவலாளி குடிக்க மறுத்தபோது, கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளார்.
32 கிலோ நகைகள்
சிறிது நேரத்தில் அனைவரும் மயக்கமடைந்ததும், வெளியே நின்றிருந்த ஒரு கூட்டாளியை உள்ளே அழைத்துள்ளார்; மற்ற இருவரை, வெளியே பாதுகாப்புக்கு நிறுத்திஉள்ளார். பின், வங்கி 'லாக்கரில்' இருந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான, 32 கிலோ தங்க நகைகள் மற்றும் பணத்தை, மூவரும் தாங்கள் கொண்டு வந்த பைகளில் அள்ளி சென்றனர்.
மேலும், வங்கி கிளையில் இருந்த 'சிசிடிவி கேமரா' பதிவுகளை சேகரித்து வைக்கும் டி.வி.ஆர்., என்ற கருவியையும் எடுத்துக் கொண்டு, இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்றது தெரிய வந்தது.முருகனின் புகைப்படம் போலீசாருக்கு கிடைத்ததை தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சென்னையின் எல்லைப் பகுதியில், முருகனின் புகைப்படத்தை வைத்து, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். முருகனின் மொபைல் போன் எண்ணை வைத்து, அவரை கண்டறியும் பணியிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நான்கு தனிப்படைகள்
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் அர்ஜுன் வரவழைக்கப்பட்டது; அது, சிறிது துாரம் ஓடிச் சென்று நின்று விட்டது. சம்பவத்தை கேள்விப்பட்டு, அந்த கிளையில் நகை அடமானம் வைத்தவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தி, 'கொள்ளை அடித்தவர்கள் அடையாளம் காணப்பட்டு விட்டனர். விரைவில் நகைகள் மீட்டு தரப்படும்' என, நம்பிக்கை அளித்ததால், கலைந்து சென்றனர்.
இதுகுறித்து, வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு அளித்த பேட்டி:வங்கியில் பணியாற்றி வரும் முருகன் என்பவர் தான், திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. வங்கியில் வேலை செய்யும் மற்ற பணியாளர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை விசாரித்து வருகிறோம்.விசாரணையில் இருப்பதால் முழு தகவல் தெரிவிக்க இயலாது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தெரிய வந்ததால், பொருட்களை மீட்பது எளிமையானது தான். கொள்ளையர்களை கண்டுபிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளை போன பொருட்கள் மதிப்பிடும் பணி நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.சென்னை விமான நிலையத்தில், நேற்று முன்தினம் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 'கொகைன், ஹெராயின்' எனும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்றும், 11 கோடி மதிப்புள்ள 'கொகைன்' பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கொள்ளையர் நடமாட்டம்
ஏற்கனவே, ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படும் நிலையில், தற்போது வெளிநாடுகளில் இருந்தும் போதை பொருட்கள்தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகின்றன. போதைப் பொருள் கடத்தல் மையமாக சென்னை மாறி வருகிறது.மேலும், பணத்திற்காக தொழிலதிபர்கள் கடத்தல், நகைக்காக பெண்கள் கடத்தல் என சர்வ சாதாரணமாக குற்றங்கள் நடந்து வரும் சூழலில், தற்போது பட்டபகலில், அரும்பாக்கம் காவல் நிலையம் அருகே, மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில், வங்கி கொள்ளை சம்பவம் நடந்திருக்கிறது. போதைப் பொருள் கடத்தலை தொடர்ந்து, கொள்ளையர் நடமாட்டமும் தமிழகத்தில் தலைதுாக்கி விட்டது என்ற அச்சம், மக்களிடையே எழுந்து உள்ளது.