புதுச்சேரி, : புதுச்சேரி கடற்கரை சாலையில் திரிந்த பிச்சைக்காரர்கள் மற்றும் ஆதரவற்ற நபர்களை, அகற்றும் நடவடிக்கையில் சமூக நலத்துறை மற்றும் தொண்டு நிறுவனம் இணைந்து ஈடுபட்டனர்.புதுச்சேரியில் முக்கிய கோவில்கள், கடற்கரை சாலை மற்றும் பிரதான சாலை சந்திப்புகளில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணியரிடம் யாசகம் கேட்டு பிச்சைக்காரர்கள் தொடர்ந்து தொல்லை கொடுக்கின்றனர்.
இதனால் சுற்றுலா பயணியர் முகம் சுளிக்கின்றனர்.இந்நிலையில், எஸ்.பி., வம்சிதா ரெட்டி தலைமையில் பெரியக்கடை போலீசார், சாரோன் சொசைட்டி ஆப் புதுச்சேரி மற்றும் சமூகநலத் துறை இணைந்து, பொது இடங்களில் திரியும் பிச்சைக்காரர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.கடற்கரை சாலையில் சுற்றித்திரிந்த பிச்சைக்காரர்கள் மற்றும் ஆதரவற்ற நபர்களை அழைத்து வந்து, நகராட்சிக்கு சொந்தமான விடுதியில் தங்க வைத்தனர்.இவர்கள் யார்? எந்த ஊர் என விசாரிக்கப்பட்டு, அவரவர் சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சாரோன் சொசைட்டி நிறுவனர் மோகன் தெரிவித்தார்.சமூகநலத் துறை துணை இயக்குனர் கனகராஜ், இளநிலை கணக்கு அதிகாரி பிரேமா மேற்பார்வையில், சாரோன் சொசைட்டி ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.