பண்பாட்டைக் காத்து தனித்துவத்தை மீட்போம்!

Added : ஆக 15, 2022 | |
Advertisement
'நள்ளிரவில் வாங்கினோம், இன்னும் விடியவில்லை; பிரிட்டிஷார் காலத்தில் இருந்தது போல் சின்னச் சின்ன சமஸ்தானங்களாகவே இருந்திருக்கலாம்; இதையெல்லாம் விட பெரிய வளர்ச்சி அடைந்திருக்கலாம்' என்றெல்லாம், 2000க்குப் பின் பிறந்தவர்களின் மத்தியில் ஒரு பெரும் விவாதமாகவே எழுந்திருக்கிறது. மாற்றுப் பார்வை என்பது தேவை தான்; அதுவே ஏமாற்றுப் பார்வை என்னும்போது, வரலாற்றை திரும்பிப்
இந்தியா பண்பாடு, இந்தியா கலாசாரம் ,  தேசியக்கொடி, 75வது சுதந்திர தின விழா,  75th Independence Day Celebration, Thesiya kodi, India Culture, இந்தியா,


'நள்ளிரவில் வாங்கினோம், இன்னும் விடியவில்லை; பிரிட்டிஷார் காலத்தில் இருந்தது போல் சின்னச் சின்ன சமஸ்தானங்களாகவே இருந்திருக்கலாம்; இதையெல்லாம் விட பெரிய வளர்ச்சி அடைந்திருக்கலாம்' என்றெல்லாம், 2000க்குப் பின் பிறந்தவர்களின் மத்தியில் ஒரு பெரும் விவாதமாகவே எழுந்திருக்கிறது. மாற்றுப் பார்வை என்பது தேவை தான்; அதுவே ஏமாற்றுப் பார்வை என்னும்போது, வரலாற்றை திரும்பிப் பார்க்க தான் வேண்டியிருக்கிறது.இந்திய வரலாற்றை சற்றே தள்ளி வைத்துவிட்டு, உலக வரலாற்றை புரட்டிப் பார்த்தால், சில ஆச்சர்யங்கள் தட்டுப்படும். கத்தியின்றி ரத்தமின்றி, எந்த நாடும் உருவாக்கப்பட்டதில்லை. ஐரோப்பிய நாடுகளும் இந்தியா போல் ஏதோவொரு வல்லரசின் காலனியாதிக்கத்தில் சிக்கிக் கொண்டிருந்த நாடுகள் தான். எப்படி மீண்டன? எப்படி தங்களை கட்டமைத்துக் கொண்டன? கடந்த 19ம் நுாற்றாண்டில், ஐரோப்பா முழுதும் ஒரு அலையடித்தது. சின்னஞ்சிறு அலைகளாக வந்து கரை தொட்டது. ஆளையே கவிழ்த்துப் போடும் சுனாமி அல்ல அது; தேசியவாத அலை. நாம் யார்? நம்முடைய அடையாளம் என்ன? நம்முடைய பண்பாடு, கலாசாரம் என்ன?ஏன் எல்லாவற்றையும்தொலைத்து விட்டோம்? நம்மை நாம் தானே ஆளவேண்டும்? எங்கே தவறிவிட்டோம்? ஐரோப்பா நாடுகளுக்கு திடீரென இப்படித் தோன்றி விட்டது. தொலைந்து போன அடையாளங்களை திரும்பக் கண்டுபிடித்தாக வேண்டும்... துண்டு துண்டாக சிதறிக் கிடந்தவர்களெல்லாம் ஒன்றாக இணைய வேண்டும்... ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நாடு பிடிக்கும் வல்லரசுகளிடம் சிக்காமல் தனித்தன்மையோடு இருக்க முடியும்... தேசியவாத அலை, ஐரோப்பிய மக்களை தட்டி எழுப்பியது!பிரான்ஸ், பிரிட்டன், டச்சு, ஆஸ்திரியா என வல்லரசுகள், ஐரோப்பிய நாடுகளை அடிமைப்படுத்திவிட்டு, ஆசியாவின் பக்கம் கவனத்தை செலுத்தியிருந்த நேரம். வல்லரசுகளுக்கான நாடு பிடிக்கும் போட்டி தான், உலக அரசியலாக இருந்தது. 'அதிகாரப் போட்டியிலிருந்து தப்பித்து, நம்மை தற்காத்துக் கொள்ள நம் பண்பாட்டு அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டும்' என இத்தாலியர்களும் நினைத்தனர்.இந்தியா போல் இத்தாலியும் தீபகற்ப நாடு தான். பண்பாடு, கலாச்சாரம் துவங்கி தேசியக்கொடியின் வடிவம் வரை, இத்தாலிக்கும், இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இத்தாலி தேசியக்கொடியின் பச்சை, வெள்ளை, சிவப்பு நிற வண்ணங்களை துாரத்தில் இருந்து பார்க்கும்போது இந்திய தேசியக்கொடிக்கும், அதற்கும் உள்ள ஒற்றுமைகள் தெரியும். இத்தாலியோடு ஒப்பிடும்போது இந்தியா, ஆசீர்வதிக்கப்பட்ட தேசம். பிரிட்டிஷாரால் மட்டுமே தொடர்ந்து ஆளப்பட்டு வந்த தேசம். பிரெஞ்சு, டச்சு போன்றவர்கள், இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்திருந்தாலும், பிரிட்டிஷாரைப் போல் நீண்ட நாட்கள் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.இத்தாலிக்கு இருந்த சிக்கல், இந்தியாவுக்கு இருந்ததில்லை. இந்தியாவின் பண்பாட்டு வரலாறு, குறைந்த பட்சம் 6,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து துவங்குகிறது.பாரதம் என்று அறியப்பட்ட தேசத்திற்கு, உலக அரங்கில் தனித்தன்மை இருந்து வந்தது. குட்டி சமஸ்தானங்களாக பிரிந்து இருந்தாலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு பண்பாட்டுத் திரியை மையமாகக் கொண்டிருந்தது. வேற்றுமையில் ஒற்றுமையாக இருந்தாலும் இந்தியா என்னும் தேசத்தை கட்மைக்க, பண்பாட்டுத் திரி உதவியது. இந்திய சுதந்திரத்திற்கு 200 ஆண்டுகள் மு, இத்தாலி ஒரு தேசமாக எழுந்து நிற்க நினைத்தது.இத்தாலியர்களுக்கான நாடு என்னும் ஒற்றை தேசியத்தை முன்வைத்து, பிரிந்து கிடந்த நாடுகளை ஒருங்கிணைக்க வேண்டும். யார் செய்வது? மன்னராட்சியில் உள்ள நாடுகள் எப்படி ஒப்புக் கொள்ளும்?இந்தியாவில் இருந்த சமஸ்தானங்களைப் போல், இத்தாலியும் குட்டி நாடுகளாக பிரிந்து கிடந்தது. அதிகாரப் போட்டியால் இத்தாலியர்களிடையே ஒற்றுமை இருந்ததில்லை.பியட்மாண்ட், சார்டினியா, மொடனா, பார்மா, டஸ்கனி, வெனிஷியா, லம்பார்டி, நேபிள்ஸ், ரோம், சிஸிலி என பல்வேறு பகுதிகளாக சிதறிக் கிடந்தது. இவற்றையெல்லாம் பிரான்ஸ், ஆஸ்திரியா போன்ற ஐரோப்பிய வல்லரசுகள் தங்களுடைய நலனுக்காக பயன்படுத்திக் கொண்டிருந்தன. இத்தாலியராக அறியப்பட வேண்டும்; தனித்தன்மையை காப்பாற்ற வேண்டும். எவர் வந்தாலும் எதிர்த்து நிற்குமளவுக்கு ஒரு வலிமையான ஒற்றை ஆட்சி வேண்டும். அதற்கு மன்னர்கள் முன்வர வேண்டும்; அமைச்சர்களும், அதிகாரிகளும் திட்டமிட வேண்டும்; சமூக ஆளுமைகள் முதல் சாமானிய மக்கள் வரை, ஒரே நோக்கத்தோடு அதை செயல்படுத்தியாக வேண்டும். ஒரே நாடு, ஒரே இத்தாலி என்கிற தேசியப் பெருமிதம் இளைஞர்களிடையே பொங்கி வழிந்தது. இத்தாலிய இளைஞர்களின் முன்னெடுப்பால் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் ஆரம்பமாகின.அத்தகைய முயற்சிகள் அனைத்தும் ராணுவப் புரட்சிகள் என்பதால், வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட நாடுகளின் மன்னர்கள், வல்லரசாக இருந்த ஆஸ்திரியாவின் ராணுவ உதவியைப் பெற்று புரட்சியாளர்களை ஒடுக்கினர்.பின்னாளில் இந்தியாவிலும் இதே போன்ற ராணுவப் புரட்சிதான் முதலில் நடந்தது. சிப்பாய் கலகம் என்று அழைக்கப்பட்ட சம்பவம், பிரிட்டிஷாரால் வெற்றிகரமாக ஒடுக்கப்பட்டது. வெறும் கலகங்களால் ஒரு நாட்டை உருவாக்கவோ, கட்டமைக்கவோ முடியாது. புரட்சியால் கிடைத்த வெற்றி நீண்ட காலத்திற்கு நிலைக்காது என்பதற்கு, இத்தாலி முதல் இந்தியா வரை ஏராளமான உதாரணங்களை பார்க்க முடியும். இத்தாலிய இளைஞர்களை ஒருங்கிணைத்த புரட்சி இயக்கத்தை நடத்திய மாஜினி என்பவருக்கு, தோல்விகள் துரத்திக் கொண்டிருந்தன.ஆனாலும், அவர் சளைக்கவில்லை. அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய இளைஞர்களை தயார் செய்தார். ராணுவப் பயிற்சி மட்டுமல்ல, ஒற்றை தேசியத்தின் தேவையை மக்களிடையே பிரசாரம் செய்யும் பயிற்சியையும் அளித்தார். பாமர மக்களிடையே தேசிய உணர்ச்சி எழுந்தது. மாஜினியின் இத்தாலிய இளைஞர் கட்சி அதற்குக் காரணமாக இருந்தது. அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுபட்ட இத்தாலிக்காகவும் அதன் இழந்த பெருமைக்காகவும் உழைத்தனர். அத்தனை இளைஞர்களும் வரலாற்றின் மீது காதல் கொண்டிருந்தனர். தங்களுடைய பெயர்களைக் கூட மாற்றிக் கொண்டனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இத்தாலியில் புழக்கத்தில் இருந்த பழைய பெயர்களை தேடியெடுத்து சூட்டிக் கொண்டனர். கடவுள் மீதான நம்பிக்கை, நாட்டுப்பற்று, மக்கள் சேவை ஆகியவற்றை தாரக மந்திரமாக செயல்பட்டது, மாஜினியின் படை, தொடர் பிரசாரங்களின் வழியாக சாமானியர்களின் நம்பிக்கையைப் பெற்றது. புதிய அரசியல் அமைப்பு, சீர்திருத்தங்கள் வேண்டுமென்று பொதுமக்களே போராட்டத்தில் இறங்கினர். புரட்சிகளை ஒடுக்கலாம்; மக்கள் போராட்டத்தை தடுக்க முடியாது.குட்டி நாடுகளாக பிரிந்து கிடந்த இடங்களை ஆட்சி செய்தவர்கள், முடியாட்சியை கைவிடத் தயாராக இல்லை. ஆனால், பியட்மாண்ட் பகுதியை ஆண்டு கொண்டிருந்த விக்டர் இமானுவேல் மட்டும், மக்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து கொண்டார். இத்தாலிய தேசிய இயக்கத்தில் மாஜினி படைகளும், மன்னர்களின் படைகளும் இணைந்து கொண்டன. மன்னராட்சி படைகளும், மன்னராட்சியை எதிர்த்த புரட்சியாளர்களின் படையும் கைகோர்த்து செயல்படுவது உலக வரலாற்றில் அதிசயம், அற்புதம். முடியாட்சியைத் துறந்து நாட்டையே மக்களுக்கு ஒப்படைத்த விக்டர் இமானுவேல் தலைமையில், விடுதலை இயக்கத்தை தொடரவும், அதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய மக்கள் தயாராக இருந்தனர். மக்களை நம்பிய மன்னர்கள் என்றும் கைவிடப்பட்டதில்லை. ஒன்றுபட்ட இத்தாலி உருவாக்கப்பட்டால் அதற்கு அவரே மன்னராக வரவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.பியட்மாண்ட் பகுதி தயாராகி விட்டது. மற்ற நாடுகள்? பியட்மாண்டின் தலைமை அமைச்சரான காவூருக்கு, சிறிய படையை மட்டும் வைத்து, மற்றவர்களை வழிக்குக் கொண்டு வரமுடியாது என்பது தெரியும். இத்தாலிய மக்களின் தேசிய உணர்ச்சியை எந்தவொரு வல்லரசும் ஏற்றுக் கொள்ளாது என்பதும் அவருக்குத் தெரியும். ராஜதந்திர நடவடிக்கைகளில் இறங்கினார் காவூர். காவூரின் ராஜதந்திர முயற்சிகள், இத்தாலிய தேசிய இயக்கத்திற்கு திருப்பு முனையாக அமைந்தன. ரஷ்யாவுக்கு எதிராக, ஐரோப்பிய நாடுகளின் காவூர் படைகளை அனுப்பி வைத்தார். பதிலுதவி செய்ய பிரான்ஸ் தயாராக இருந்ததை பயன்படுத்திக் கொண்டார். பிரெஞ்சுப் படைகளும், ஆஸ்திரியப் படைகளும் மோதிக்கொண்டால் தன் இத்தாலிய கனவு நிறைவேறும் என்று நினைத்தார். பிரெஞ்சுப் படைகளும், ஆஸ்திரியப் படைகளும் மோதிக் கொண்டன.ஒரு பக்கம் பியாட்மாண்ட்டின் தளபதியான கரிபால்டி, இன்னொரு பக்கம் தலைமை அமைச்சரான காவூர். இருவருமே விக்டர் இமானுவேலுக்கு விசுவாசமாக இருந்தனர். இருவரும் இணைந்து மற்ற நாடுகளில் புரட்சி இயக்கங்களை ஆரம்பித்து, இத்தாலிய கனவுகளை விதைத்து, மன்னராட்சிக்கு நெருக்கடி தந்தனர். பத்தாண்டு கால போராட்டத்திற்குப் பின், ஒருங்கிணைந்த இத்தாலி உருவானது. ரோம் நகரம் யாருக்கு என்பதில் பிரான்ஸ் உடனான சண்டையில் இறுதியில், இத்தாலிக்கே வெற்றி கிடைத்தது. இத்தாலி, இத்தாலியருக்கே என்கிற கோஷம் ஐரோப்பியத் தெருக்களில் ஒலித்தது. மன்னர், தளபதி, அமைச்சர், சாமானியர் என அனைத்து தரப்பினரின் பங்களிப்பின் காரணமாக, இத்தாலி என்னும் தேசம் உருவானது.அடுத்து வந்த 30 ஆண்டுகளில், உலகம் முழுதும் தேசிய இனங்களின் எழுச்சி ஆரம்பித்து விட்டது. அடுத்தடுத்து வந்த உலகப் போர்களின் வழியாக உச்ச நிலையை அடைந்தது. பண்பாட்டு ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இந்தியாவுக்கு, முழு சுதந்திரம் தருவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை, பிரிட்டிஷாரும் புரிந்து கொண்டனர்.உலக வரலாற்றில் கத்தியின்றி, ரத்தமின்றி இந்தியா என்னும் தேசம் மீண்டும் உருவாக்கப்பட்டது. பண்பாட்டையும், தனித்தன்மையையும் தொலைத்து விட்டு, வல்லரசுகளின் பிடியில் இருந்தால், பகடைக்காயாக மாறிவிடுவோம். சமீபத்திய உதாரணம் தைவான். அமெரிக்க கடற்படையும், சீன கடற்படையும் தங்களுடைய ஆயுத பலத்தை வெளிக்காட்டும் இடமாக தைவான் அமைந்து விட்டது. இந்தியாவுக்கு அப்படியொரு நிலை, எந்நாளும் ஏற்பட்டு விடக் கூடாது.பண்பாட்டைக் காப்போம்; தனித்துவத்தைப் பேணுவோம்! 'மதச் சார்பற்ற' என்ற சொல்லுக்கு உண்மையான பொருள் புரியாமல் அல்லது அதன்படி செயல்படாமல், நம் அடி நாதத்தைத் தொலைத்து, எதிரிகளின் பேச்சுக்கு அடிமையாகி, உள்ளூர் அரசுகளை எதிர்த்து, தன்னாட்சி பேசித் திரியாமல், நாட்டைப் பாதுகாப்போம்!
- ஜெ.ராம்கி


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X