திருப்பூர்:சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுக்காக, 'நம்ம ஊரு சூப்பரு' என்ற தலைப்பில் பேனர் வைக்க, ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.மத்திய, மாநில அரசு திட்டங்களின் வாயிலாக, கிராமப்புற மக்களுக்கு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.'ஜல் ஜீவன் மிஷன்', துாய்மை பாரத இயக்கம் வாயிலாக, கிராமப்புற மக்களுக்கு, குடிநீர், மரம் வளர்ப்பு, கழிப்பறை கட்டுவது, திடக்கழிவு மேலாண்மை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இந்நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதார மேம்பாடு குறித்து, 'நம்ம ஊரு சூப்பரு' என்ற பெயரில், விளம்பர பேனர்கள் வைக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டது. அதன்படி, கிராமசபா கூட்டங்களில், நேற்று முன்தினம் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் கூறியதாவது:வீடுகள் தோறும், மக்கும் குப்பை; மக்காத குப்பை என, தரம்பிரித்து வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.மக்கும் குப்பைகளை கொண்டு, இயற்கை உரம் தயாரித்து, வீட்டுத்தோட்டத்துக்கு பயன்படுத்தலாம். குடிநீர் சிக்கனம், மற்றும் திரவ கழிவுநீரை, உறிஞ்சு குழிகளின் மூலம், சுத்திகரிப்பு செய்து நிலத்தில் சேர்ப்பது போன்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஊரக வளர்ச்சி திட்டங்களை விளக்கும் வகையிலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், 'நம்ம ஊரு சூப்பரு...' என்ற தலைப்பில், விளம்பர பேனர்கள் வைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.