இருசக்கர வாகனம் ஓட்டி பதற வைக்கும் சிறார்கள்: பெற்றோரே இது பெருமை அல்ல பேராபத்து| Dinamalar

இருசக்கர வாகனம் ஓட்டி பதற வைக்கும் சிறார்கள்: பெற்றோரே 'இது பெருமை அல்ல பேராபத்து'

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (7) | |
பிள்ளையின் எதிர்காலம் குறித்து பல கனவுகளுடன் இருக்கும் பெற்றோர், 18 வயதிற்கு கீழ் உள்ள சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது. போக்குவரத்து விதிப்படி 18 வயது நிரம்பிய பின் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் (லைசன்ஸ்) பெற்ற பிறகே வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டும்.சமீப காலமாக சிறுவர்கள் மொபட், பைக் ஓட்டுவது அதிகரித்துள்ளது. இதற்கு பெற்றோரும் காரணமாக உள்ளனர். மகன் அல்லது
இருசக்கர_வாகனம், சிறார்கள், பேராபத்து, பெற்றோர், உஷார்

பிள்ளையின் எதிர்காலம் குறித்து பல கனவுகளுடன் இருக்கும் பெற்றோர், 18 வயதிற்கு கீழ் உள்ள சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது. போக்குவரத்து விதிப்படி 18 வயது நிரம்பிய பின் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் (லைசன்ஸ்) பெற்ற பிறகே வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டும்.சமீப காலமாக சிறுவர்கள் மொபட், பைக் ஓட்டுவது அதிகரித்துள்ளது. இதற்கு பெற்றோரும் காரணமாக உள்ளனர். மகன் அல்லது மகள் சிறு வயதில் மொபட், பைக் ஓட்டுவதை பெருமையாக கருதுகின்றனர். அவர்களே பைக் ஓட்ட கற்றுக் கொடுக்கின்றனர். அவர்களது ஆசையை நிறைவேற்றுவதாக நினைத்து பெற்றோர் மிகப்பெரிய தவறை செய்கின்றனர். பிள்ளைகள் வாகனம் ஓட்ட வேண்டும் என்று கூறினாலும் அதிலுள்ள பிரச்னைகளை பெற்றோர் எடுத்துக் கூற வேண்டும். அதை விடுத்து பிள்ளையின் மீதுள்ள பாசத்தால் கண்ணை மூடிக் கொண்டு இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது.
பள்ளிக்கும் 'டிமிக்கி'


latest tamil news


மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டக் கூடாது என்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அடிக்கடி பெற்றோர் சந்திப்பு கூட்டங்கள் வாயிலாக கூறுகின்றனர். போக்குவரத்து போலீசாரும் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் கூறுகின்றனர். ஆனாலும் அதை பெரும்பாலான மாணவர்களும், பெற்றோரும் மதிப்பதில்லை. மாணவர்கள் மொபட், ஸ்கூட்டர், பைக் போன்ற இரு சக்கர வாகனங்களில் பள்ளி சீருடையில் வருதை தினந்தோறும் பார்க்க முடிகிறது.ஓட்டுனர் உரிமம் இல்லாத அவர்கள், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் ஒன்றிற்கும் மேற்பட்ட நண்பர்களை பின்னால் அமர வைத்து வருகின்றனர். 'இளம் கன்று பயம் அறியாது' என்பது போல் பைக்கில் அதிவேகமாக வந்து, மற்ற வாகன ஓட்டிகளை பதற வைக்கின்றனர். இவர்கள் செய்யும் தவறை மறைக்க வாகனத்தை பள்ளி அருகில் உள்ள தெருக்களில் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.latest tamil newsமோட்டார் வாகன விதி


மோட்டார் வாகன விதிப்படி, பைக் ஓட்ட வேண்டுமெனில், 18 வயது நிறைவடைய வேண்டும். அதற்கு முன்பே வாகனத்தை ஓட்ட வேண்டுமென்றால், மோட்டார் வாகன உரிமம் பெற்ற பெற்றோர் மேற்பார்வையில், அவர்களது பெயரிலுள்ள 50 சி.சி., திறன் வரை கொண்ட மோட்டார் வாகனத்தை மட்டுமே ஓட்டலாம். அதற்கு, 16 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதற்கு வயது சான்று, பள்ளியின் ஒப்பந்த சான்று, பெற்றோரின் உரிமம், ஆர்.சி., புத்தகம், இன்சூரன்ஸ் சமர்ப்பித்து, அதற்கென்று மோட்டார் வாகன உரிமம் (லைசென்ஸ்) பெற வேண்டும். இது பெரும்பாலான பெற்றோருக்கு தெரியாததால், பைக் வாங்கி கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.latest tamil newsதண்டனை என்ன


திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில், உரிமம் (லைசென்ஸ்) இல்லாமல் வாகனம் ஓட்டும் சிறார்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 2019 சட்டப்பிரிவு 199(ஏ)ன்படி, ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறாமல் பைக் ஓட்டும் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தான் முழு பொறுப்பு. ''தங்களுக்கு ஏதும் தெரியாது; சின்ன பையன் தெரியாமல் செஞ்சுட்டான்'' என கூறி தப்பித்துவிட முடியாது, லைசென்ஸ் இல்லாத சிறுவனுக்கு பைக் கொடுத்ததற்காக பெற்றோர் அல்லது பாதுகாவலர், வாகன உரிமையாளருக்கு 25 ஆயிரம் அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.சிறார்கள் விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் பதிவும் 12 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டு விடும். பின்னர் புதிதாக வாகன பதிவு செய்ய வேண்டி இருக்கும். அத்துடன், வாகனம் ஓட்டிய சிறார்கள் 25 வயது வரை எவ்வித ஓட்டுநர் உரிமமும் பெற இயலாது. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்திலேயே அதிக அபராதம் சிறார் வாகனம் ஓட்டுவதற்கு தான் விதிக்கப்பட்டுள்ளது.இதுபோன்ற விபத்து வழக்கில் எல்லா நடைமுறைகளையும் கோர்ட்டில் தான் பெற்றோர் சந்திக்க வேண்டி இருக்கும். அபராத பணத்தையும் கோர்ட்டிற்கு சென்று தான் கட்ட வேண்டும். வழக்கு, வாய்தா என கோர்ட்டுக்கு அலைய வேண்டி இருக்கும். விபத்தினை ஏற்படுத்திய சிறுவர்களுக்கு சம்மன் உள்ளிட்ட கோர்ட் நடைமுறைகள், அவர்களிடம் தேவையற்ற அச்சம், பதற்றத்தை ஏற்படுத்தும். படிக்கும் வயதில் சிந்தனையை திசை திருப்பி விடும்.
இழப்புகள் அதிகம்


latest tamil news


சில மாதங்களுக்கு முன் புதுச்சேரி அடுத்த பத்துக்கண்ணு பகுதியில் பிளஸ் 2 முடித்த மாணவர் தன் அண்ணனின் இருசக்கர வாகனத்தை எடுத்து ஓட்டினார். அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியதில் மூதாட்டிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. போலீஸ் வழக்கு பதிந்த நிலையில், சம்மன் வந்தபோது வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதால் அந்த குடும்பம் மகனை இழந்து பேரிழப்பை சந்தித்துள்ளது.இதே போல் கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அருகே கடந்த 8ம் தேதி இரவு எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன், தந்தையின் ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை ஓட்டிச் சென்றார். அப்போது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது பெண் குழந்தை மீது பைக் மோதி பரிதாபமாக இறந்தது. சிறுவன் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர். விளையாடிக் கொண்டிருந்த 'அப்பாவி' குழந்தையின் உயிர் போனது.பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அதோடு இருசக்கர வாகனம் ஓட்டும் சிறார்கள் விபத்தில் சிக்கி 'அகால' மரணம் அடையும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பல கனவுகளுடன் இருக்கும் பெற்றோர், உண்மையில் அவர்கள் மீது அக்கறை இருந்தால் தயவு செய்து இரு சக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்.இன்சூரன்ஸ் கிடைக்குமா?

இன்சூரன்ஸ் நிறுவன பிரதிநிதிகள் கூறியதாவது: மோட்டார் வாகன சட்டப்படி பைக்கிற்கு இன்சூரன்ஸ், ஓட்டும் நபருக்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் இருக்க வேண்டும். அப்போது தான் விபத்தின்போது இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும். சிறுவனுக்கு லைசென்ஸ், வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இருந்தால் பிரச்னை இல்லை. ஒருவேளை பைக்கிற்கு இன்சூரன்ஸ் இருந்து ஓட்டும் சிறுவனுக்கு லைசென்ஸ் இல்லையென்றால் சிக்கல் தான். விபத்தில் பைக் சேதமடைந்து இருந்தாலும் காப்பீடு கிடைக்காது. ஓட்டுநர் உரிமம் இல்லாத பைக் கொடுத்தவரே அனைத்து பழுதுகளையும் சரி செய்து கொள்ள வேண்டும்.ஒருவேளை லைசென்ஸ் இல்லாத சிறுவன் ஓட்டும் பைக்கினால் உயிரிழப்பு நேர்ந்தால், பெற்றோருக்கு தான் சிக்கலை ஏற்படுத்தும். இத்தகைய உயிரிழப்பு வழக்குகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு தொகை கொடுக்காது. அதுபோன்ற சூழ்நிலையில் நீதிமன்றம் தலையிடுகிறது. இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு ஒப்பந்தம் இருந்தாலும் கூட, சம்பந்தமில்லாத அப்பாவி ஒருவர் உயிரிழந்து அவரது குடும்பம் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் நீதிமன்றம் உத்தரவிடும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும்.பிறகு, இத்தொகையை சிறுவனுக்கு பைக் கொடுத்த வாகன உரிமையாளரிடம் ஒரே தவணையாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வசூலித்துக் கொள்ள வேண்டும். எனவே இழப்பீட்டு தொகையை பைக் கொடுத்தவர் தான் அளிக்க வேண்டி இருக்கும். இது பிறகு தெரிய வரும்போது தான் பெற்றோர் நிலைகுலைந்து விடுகின்றனர். எனவே, லைசென்ஸ் இல்லாத, 18 வயதிற்கு உட்பட்டவர்கள் பைக் ஓட்டுவதை அனுமதிக்காமல் இருப்பதே நல்லது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


-நமது நிருபர்-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X