பொம்மிடி அடுத்த திப்பிரெட்டிஹள்ளி பஞ்.,ல் மணிபுரம், குக்கல்மலை, பசுவாபுரம், பத்திரெட்டிஹள்ளி, ராமதாஸ் நகர் உள்ளிட்ட, 26 கிராமங்கள் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவராக, பா.ம.க.,வை சேர்ந்த சித்ரா உள்ளார். குக்கல்மலையில் சுதந்திர தினத்தையொட்டி நேற்று முன்தினம் நடந்த கிராம சபா கூட்டத்தில் பொதுமக்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பஞ்., வளர்ச்சியை பற்றி பேசாமல், பொதுமக்களையும் பேசவிடாமல், பஞ்., வார்டு உறுப்பினர்கள், கிராமங்களில் செய்த திட்டப்பணிக்கு கமிஷன் தரவில்லை. பல்வேறு பணிகள் இருமுறை செய்யப்பட்டது, கமிஷன் தரவில்லை என, ஒருவருக்
கொருவர் மாறி மாறி குற்றச்சாட்டினர். பஞ்., தலைவர் சித்ரா பேசாமல் அமைதி காக்க, அவரது கணவர் சுப்பிரமணியன், வார்டு உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதனால், பொதுமக்கள் தங்களது குறைகளை கூற முடியாமல் தவித்தனர்.
பல்வேறு பணிகள் கிராம பகுதிகளில் செய்யப்படவில்லை, குறிப்பாக குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்யவில்லை என, வார்டு உறுப்பினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறி, வார்டு உறுப்பினர்கள் பதவி விலகுவதாகவும், அதிகாரிகள் தலைமையில் பஞ்.,ல் நிர்வாகம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து, கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை.