காவேரிப்பட்டணம் அடுத்த, தளிப்பட்டி தென்பெண்ணை ஆற்றிலிருந்து வேலம்பட்டி, சந்துார் பிரிவு சாலை, மகாதேவ கொல்லஹள்ளி வழியாக, திருப்பத்துார் மாவட்டத்திற்கு, திருப்பத்துார் கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் செல்கிறது. திருப்பத்துார் நகராட்சி மூலம் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்ட இத்திட்டம், தற்போது வரை செயல்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தளிப்பட்டியிலிருந்து, 25 கி.மீ., கடந்து திருப்பத்துார் மாவட்ட எல்லையை அடைந்து, திருப்பத்துார் நகராட்சி பகுதிக்கு இத்திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அடிக்கடி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக மகாதேவகொல்லஹள்ளி பஞ்., உட்பட்ட தாதனுார் பகுதியிலுள்ள நீர்த்தேக்க தொட்டி நிரம்பி, பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி, சுற்று வட்டார பகுதியிலுள்ள, 50க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.