ஓசூரில் நடந்த மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில், போச்சம்பள்ளி வாலிபர் தேர்வு செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்ட அமெச்சூர் பாடி பில்டிங் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி, ஓசூர் ஆந்திர சமிதியில் நடந்தது. இதில், 50 முதல், 70 கிலோ எடை பிரிவு வரை பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. ரவிச்சந்திரன், மயில்சாமி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
பல்வேறு பிரிவுகளில் தேர்வானவர்களுக்கு இறுதி போட்டி நடத்தப்பட்டது. இதில், போச்சம்பள்ளியை சேர்ந்த காமராஜ், மாவட்ட ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, கேடயம் மற்றும் பரிசு தொகையாக, 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
அதேபோல், சிறப்பான உடல் கட்டழகை வெளிப்படுத்திய ஓசூரை சேர்ந்த உதய் கிரண் மற்றும் சிறந்த தசை பிரிவில் ஆனந்த் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு, கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. தி.மு.க., பகுதி செயலாளர் ராமு, சிட்டி கேபிள் வேலு, முருகன், வெங்கடேஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். ஏற்பாடுகளை, சோல்ஜர் ஜிம் மாஸ்டர் கோபால் செய்திருந்தார்.