'மான்செஸ்டர் கால்பந்து அணியை வாங்க இருப்பதாக டிவிட்டரில் கூறியது நகைச்சுவை' என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், அவ்வப்போது டிவிட்டரில் சம்பந்தமில்லாத ஒன்றை பதிவிட்டு, பின்னர்
நான் அவ்வாறு கூறவில்லை என விளக்குவதை வழக்கமாக வைத்துள்ளார். முன்னர் சமூக ஊடக நிறுவனமான டிவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்க இருப்பதாக அறிவித்தார். பின்னர் ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்தார். இதனை எதிர்த்து டிவிட்டர் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அக்டோபரில் விசாரணை நடைபெற உள்ளது.
இந்நிலையில், நேற்று தனது டிவிட்டரில், 'நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்க இருக்கிறேன். உங்களை வரவேற்கிறேன்' என பதிவிட்டிருந்தார். இங்கிலீஷ் பிரிமியர் கால்பந்து தொடரில் தோல்விகளால் சரிவில் உள்ள மான்செஸ்டர் கால்பந்து அணியை வாங்குவதாக மஸ்க் அறிவித்ததை ரசிகர்கள் சிலர் கொண்டாடினர். ஆனால் பலராலும் இதை நம்ப முடியவில்லை.
ஏறக்குறைய 4 மணி நேரத்திற்கு பிறகு, டுவிட்டர் பயனர் ஒருவர், 'நீங்கள் உண்மையாக சொல்றீங்களா' என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, ”இல்லை. இது நீண்ட கால டிவிட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் நகைச்சுவை. நான் எந்தவொரு விளையாட்டு சார்ந்த அணியையும் வாங்கவில்லை” என மஸ்க் பதிலளித்துள்ளார்.
![]()
|
இதற்கு முன்பு கடந்த ஏப்ரலில், டிவிட்டரை வாங்குவதாக அறிவித்த 2 நாட்களில், 'அடுத்து நான் கோகோ கோலாவை வாங்க இருக்கிறேன். கோகோயினை மீண்டும் கொண்டு வருகிறேன்' என மஸ்க் பதிவிட்டார். அப்போது நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்காவில் சூடான விவாதத்தை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.