புதுடில்லி: டில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் கலந்து கொண்டதற்காக நன்றி தெரிவித்த ஸ்டாலின், நீட் தேர்வு விலக்கு, காவிரி விவகாரம் உள்ளிட்ட தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.

முன்னதாக டில்லியில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை அவரது இல்லத்தில் ஸ்டாலின் சந்தித்தார். அப்போது நினைவுப்பரிசு ஒன்றை ஸ்டாலின் வழங்கினார். இந்த சந்திப்பின் போது, தலைமை செயலாளர் இறையன்பு, திமுக எம்.பி., பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதன் பின்னர், ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தொடர்ந்து நிருபர்களை சந்தித்த ஸ்டாலின் பேசியதாவது: ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இந்த சந்திப்பு மனநிறைவை தருகிறது. இருவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு இருந்தும் வர முடியாத சூழல். ஜனாதிபதியுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. அப்போது கோரிக்கை எதுவும் வைக்கவில்லை.
மாலை 4 மணிக்கு மோடியை சந்தித்து, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நேரில் பங்கேற்றதற்காக நன்றி தெரிவிக்க உள்ளேன். மோடியை, இதற்கு முன்னர் சந்தித்த போது கோரிக்கைகள் முன் வைத்துள்ளேன். அவற்றில் சில நிறைவேறும் சூழல் இருந்தாலும், பல நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதனை நிறைவேற்ற வலியுறுத்த உள்ளேன். நீட் பிரச்னை, புதிய கல்வி கொள்கை, மின்சாரம், காவிரி விவகாரம், மேகதாது குறித்து வலியுறுத்த உள்ளேன். தமிழக கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்து வைக்க உள்ளேன். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
இந்த கூட்டத்தில், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஸ்டாலின், அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்றார்.

இதன் பின்னர் மாலையில் மோடியை சந்தித்து ஸ்டாலின் பேசினார். அப்போது நினைவு பரிசு ஒன்றையும் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றதற்காக நன்றி தெரிவித்ததுடன், நீட் தேர்வு, காவிரி விவகாரம், மேகதாது அணை உள்ளிட்ட தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.