பழனிசாமி நடத்திய கூட்டம் விழுந்தது தடை!

Updated : ஆக 19, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (29+ 121) | |
Advertisement
சென்னை :அ.தி.மு.க.,வில் பிரிவினைக்கான நடவடிக்கைகளுக்கு தடை விழுந்துள்ளது. பழனிசாமி நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், பழைய நிலையே தொடர வேண்டும் என்றும், பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. கட்சியின் தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவிப்பின்படி, அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னையில் ஜூலை 11ல்
பழனிசாமி நடத்திய கூட்டம்  விழுந்தது தடை!

சென்னை :அ.தி.மு.க.,வில் பிரிவினைக்கான நடவடிக்கைகளுக்கு தடை விழுந்துள்ளது. பழனிசாமி நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், பழைய நிலையே தொடர வேண்டும்
என்றும், பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.

கட்சியின் தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவிப்பின்படி, அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னையில் ஜூலை 11ல் நடத்தப்பட்டது. அதில், இடைக்கால பொதுச்
செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.கட்சி விதிகளின்படி பொதுக்குழுவை கூட்ட, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு தான் அதிகாரம் உள்ளது என்பதால், விதிகளை மீறி நடத்தப்படும் இந்தப் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து வழக்கு தொடர்ந்தனர்.


மேல்முறையீடுஇம்மனுக்களை, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். மனுக்களை, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம், வைரமுத்து மேல்முறையீடு செய்தனர். வழக்கை, மீண்டும் உயர் நீதிமன்றம் விசாரிக்கும்படி, உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பியது. இரண்டு வாரங்களில் விசாரணையை முடிக்கவும் உச்ச நீதிமன்றம்
அறிவுறுத்தியது.இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க, நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். பன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், வழக்கறிஞர்கள் திருமாறன், பி.ராஜலட்சுமி; வைரமுத்து சார்பில், வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகினர்.
இவ்வழக்கில், நேற்று காலை நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:கடந்த காலங்களில், உரிய நபரின் கையெழுத்துடன், எழுத்துப்பூர்வ 'நோட்டீஸ்' அனுப்பியே, கூட்டங்கள் கூட்டப்பட்டு உள்ளன. இந்த நடைமுறையே கட்சியில் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. அதனால், ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தை நியாயப்படுத்துவதை ஏற்கமுடியாது.பொதுக்குழுவை கூட்டுவதற்கு தகுதி படைத்தவர் குறித்தும், இந்த வழக்கில் பரிசீலிக்க வேண்டியதுள்ளது. ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அன்றே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகி விட்டதாகவும் எதிர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


அவைத் தலைவர்இந்த காரணங்களால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான பணிகளை ஆற்ற, அவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளதாகவும், அவர் பொதுக்குழு கூட்டுவதில் சட்டவிரோதம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகி விட்டாலும், பொதுக்குழு உறுப்பினர்கள் தொடர்வதாகவும் கூறப்பட்டது.கடந்த ஆண்டு டிசம்பர் 1ல் நடந்த நிர்வாக குழு கூட்டத்தில், விதிகளில் திருத்தம் ஏற்படுத்தி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்தப்பட்டதாகவும், ஆனால், அந்த திருத்தத்துக்கு, 2022 ஜூன் 2௩ல் நடந்த பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், அதனால் இரண்டு பதவிகளும் காலியாகி விட்டதாகவும், எதிர் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.இந்த வாதம் தவறானது என, மனுதாரர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த நீதிமன்றமும், 'ஆம், அது தவறானது' என கருதுகிறது.
ஒற்றை ஓட்டு முறை அறிவிக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பழனிசாமி தவிர, வேறு வேட்புமனு எதுவும் பெறப்படவில்லை. அவர்கள், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.அதைத் தொடர்ந்து, நிர்வாகிகள் பட்டியலை சமர்ப்பித்து, தேர்தல் கமிஷன் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. எனவே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் ஏற்றுக் கொள்ளப்பட்டு, செயல்பாட்டுக்கும் வந்து விட்டது.திடீரென, நிர்வாக குழுவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு, பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படவில்லை என எதிர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.


முரணாக உள்ளதுகடந்த ஜூன் 23ல் நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கான வரைவு தீர்மானத்தை பரிசீலித்தால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு, பொதுக்குழுவில் ஒப்புதல் பெறுவது தொடர்பாக எதுவும் இல்லை.அடிப்படை உறுப்பினர்களால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் தேர்வுக்கு, பொதுக்குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கட்சி விதிகளில் இல்லை.
தேர்தல் நடத்தி, அதை தேர்தல் கமிஷனுக்கும் அனுப்பிய பின், திடீரென காலியாகி விட்டதாக அல்லது காலாவதியாகி விட்டதாக கூற முடியாது. அவர்களின் பதவிக்காலம் 2026 வரை உள்ளது.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்யாத போது, அல்லது வேறு எந்த காரணங்களாலோ காலியாகாத போது, அந்த பதவிகள் காலியாகி விட்டதாக எதிர் தரப்பில் கருத முடியாது.இரண்டு பதவிகள் மட்டுமே காலியாகி அல்லது காலாவதியாகி விட்டதாக கூறி விட்டு, மற்ற பதவிகளுக்கு நடந்த தேர்தல் வாயிலாக, இவர்களால் நியமிக்கப்பட்டது செல்லும் என கூறுகின்றனர்.

இதேபோன்ற நடைமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகி விட்டதாக அறிவிக்க முடியும் என்பது, முரண்பாடாக மட்டுமின்றி, கட்சி விதிகளுக்கும் முரணாக உள்ளது.
கடந்த 2017 செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்படி, ஐந்து ஆண்டு பதவி காலம் என்பது, 2022 செப்டம்பரில் தான் முடிகிறது. 2021 டிசம்பரில், மீண்டும் இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகள் தேர்தல் உடன், இவர்களின் தேர்தல் குறித்தும், தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. அதன்படி, 2026 டிசம்பரில் பதவி காலம் முடிகிறது.ஆனால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டுமே கட்சி விதிகளை மீறுவதாக கூறுகின்றனர். வரைவு தீர்மானங்களில், ஒருங்கிணைப்பாளர்
மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் தீர்மானம் இல்லை. தேர்தல் கமிஷனுக்கு, 2022 ஜூன் 28ல் பழனிசாமி அனுப்பிய கடிதத்தில், இதை ஒப்புக் கொண்டுஉள்ளார்.

அப்படி இருக்கும்போது, இரண்டு பதவிகளும் காலியாகி விட்டது போல், தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர்.எனவே, ஜூலை 11ல் கூட்டப்பட்ட பொதுக்குழு, தகுதியான நபரால் கூட்டப்படவில்லை. 15 நாட்கள் நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை. இரண்டு பதவிகளும் காலாவதியாகி விட்டதாக கூறியது, கற்பனை அடிப்படையில் தான். காலியாகி விட்டதாக கூறுவதற்கான காரணமும், அடிப்படையற்றது; கட்சி விதிகளை மறைப்பதற்காக, வசதிக்கேற்ப கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.பொதுக்குழுவை கூட்ட, தற்காலிக அவைத் தலைவருக்கு உரிமை வழங்கப்படவில்லை. ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், 30 நாட்களில் கூட்டத்தை கூட்ட வேண்டும். கூட்ட தேதியை, 15 நாட்களுக்கு முன்பாக தெரிவிக்க வேண்டும். ஜூலை 11 பொதுக்குழு கூட்டம், அங்கீகரிக்கப்பட்ட நபரால் கூட்டப்படவில்லை; 15 நாட்கள் நோட்டீசும் கொடுக்கப்படவில்லை.


போட்டியிட முடியாத நிலைஎனவே, பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவில்லை என்றால், கட்சி விதிகளுக்கு முரணாக பொதுக்குழுவை கூட்டிய பழனிசாமி தரப்புக்கு, கூடுதல் வசதி ஏற்பட்டு விடும்.
ஏனென்றால், இந்தக் கூட்டத்தில், பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலர், கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களால், பொதுச்செயலர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உள்ளது.பெரும்பான்மை உறுப்பினர்கள் இரட்டை தலைமை அசவுகரியமாக இருப்பதாகவும், ஒற்றை தலைமை வேண்டும் என கூறுவதாகவும், எதிர் தரப்பில் கூறுவதற்கு, புள்ளிவிபரங்கள் அடிப்படை இல்லை. முதல்வர் மற்றும் துணை முதல்வர் என, இதே இரட்டை தலைமை நான்கரை ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்துள்ளது. கட்சியை, ஐந்து ஆண்டுகள் வழிநடத்தி உள்ளனர்.இருவரும் ஒன்றாக தேர்தல் கூட்டணியை முடிவு செய்து, வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

அப்படி இருக்கும்போது, திடீரென எப்படி 2022 ஜூன் 20ல் இருந்து ஜூலை 1க்குள், ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட கட்சி, மாற்றத்துக்கான முடிவை எடுத்தது?பொதுக்குழு உறுப்பினர்கள் 2,500 பேரின் கருத்துக்கள், உண்மையிலேயே ஒன்றரை கோடி உறுப்பினர்களின் கருத்துகளை பிரதிபலிக்கிறதா என்பதை ஆராய வேண்டியுள்ளது. கட்சி விதிகளின்படி திருத்தம் ஏற்படுத்தலாம்; ஆனால், உரிய நடைமுறையை பின்பற்றி தான் மேற்கொள்ள வேண்டும்.

கட்சி உறுப்பினர்கள் தான், தலைமை பற்றி முடிவெடுக்க வேண்டும். அவர்களின் முடிவில், நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால், நடைமுறை மீறல்கள் இருந்தால், நீதிமன்றம் வாயிலாக நிவாரணம் கோர தடை இல்லை.கடந்த ஜூலை 11 பொதுக்குழுவுக்கு அனுமதியில்லாத நபர் அழைப்பு விடுத்து, ஜூலை 1ல் அனுப்பிய நோட்டீஸ் செல்லாது. இரண்டு தலைவர்களுக்கு இடையேயான பிரச்னையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு இரட்டை இலை சின்னம் பெற முடியவில்லை.

கட்சி தொண்டர்களுக்கு, இது பாதிப்பை ஏற்படுத்தியது.

எனவே, 2022 ஜூன் 23க்கு முந்தைய நிலை தொடர வேண்டும். ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, இருவரது ஒப்புதல் இன்றி, நிர்வாக குழு அல்லது பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியாது.ஒற்றை தலைமை உள்ளிட்ட கட்சி நடவடிக்கைகளில் திருத்தம் கொண்டு வர, இரண்டு பேரும் சேர்ந்து பொதுக்குழுவை கூட்ட, எந்த தடையும் இல்லை. பொதுக்குழு உறுப்பினர்களில், ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்களிடம் இருந்து முறையீடு பெறப்பட்டால், பொதுக்குழுவை கூட்ட, இருவரும் மறுக்கக் கூடாது.
அவ்வாறு வேண்டுகோள் வந்தால், 30 நாட்களுக்குள் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்; அதற்கு, எழுத்துப்பூர்வமாக 15 நாட்கள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். பொதுக்குழு கூட்ட, வேறு எந்த காரணங்களுக்காவது நீதிமன்ற உத்தரவு தேவை என கருதினாலோ அல்லது கூட்டம் நடத்த ஆணையரின் உதவி தேவைப்பட்டாலோ, இருவரும் நீதிமன்றத்தை அணுகலாம்.
இவ்வாறு நீதிபதி உத்தர விட்டுள்ளார்.

செல்லாது செல்லாது!


இந்த உத்தரவு குறித்து, வழக்கறிஞர் திருமாறன் கூறும்போது, ''ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்பதால், அந்தக் கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு; பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் நீக்கம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது. பழைய முறைப்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடரும்,'' என்றார்.'கசந்த காலங்கள் இனி வசந்த காலமாக மாறும்!''எம்.ஜி.ஆர்., வகுத்தெடுத்த விதிகளை, துச்ச மாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவர் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இனி கட்சியின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டு, அசைக்க முடியாத எக்கு கோட்டையாக, அ.தி.மு.க., திகழும்; வெற்றி நடைபோடும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:

தர்மத்தை நம்பினேன்; மாட்சிமைமிக்க நீதிமன்றங்களை நம்பினேன். கட்சியை உயிராக நேசிக்கும் தொண்டர்களை நம்பினேன். உண்மையும், தர்மமும் என் பக்கம் தான் இருக்கிறது என்பதை உளமார நம்பிய மக்களை நம்பினேன்.
இவை யாவுக்கும் மேலாக, தமிழக மக்களுக்காக, இந்த அப்பழுக்கற்ற இயக்கத்தை தோற்றுவித்து, வளர்த்தெடுத்து பாதுகாத்து, தங்கள் ஆயுளையே அர்ப்பணித்த, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆசிகளை நம்பினேன். இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாகி இருக்கிறது.
அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக சட்டத்திற்கு புறம்பாக அபகரிப்பதை, நீதியும், தர்மமும், தொண்டர்களும், பொது மக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக் கொள்ளாது என்பதை, இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது.
அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., வகுத்தெடுத்த விதிகளை, துச்சமாக நினைப்போர் வீழ்ந்து போவர் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இனி கட்சியின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டு, அசைக்க முடியாத எக்கு கோட்டையாக, அ.தி.மு.க., திகழும். வெற்றி நடைபோடும் என்பது திண்ணம்.
'தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர்வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே' என்ற எம்.ஜி.ஆரின் திருமந்திரத்தை, இதயப்பூர்வமாக ஏற்று, நிரந்தரப் பொதுச் செயலர் என்றைக்கும் ஜெயலலிதா தான் என்னும் உணர்வு கொண்ட, ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்து செல்வேன். கட்சியின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இது பின்னடைவு அல்ல கே.பி.முனுசாமி விளக்கம்''அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்கள், முழுமையாக பழனிசாமியை ஏற்றுக் கொண்டுள்ளனர்,'' என, பழனிசாமி ஆதரவாளரான, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:நடந்து முடிந்த பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினர். அவர்கள் 100 பொதுக்குழு உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, நீதிமன்றம் செல்கின்றனர். இதில் பின்னடைவு என்ற கேள்வி எழவில்லை.
மொத்தம் உள்ள, 2,600 பொதுக்குழு உறுப்பினர்களில், 2,562 பேர் பழனிசாமியை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். பொதுக்குழு உறுப்பினர், கீழ்மட்ட கட்சி உறுப்பினர்கள் வழியாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
அவர்கள் தான் கட்சியின் அனைத்து அதிகாரமும் படைத்தவர்கள். அவர்கள் ஒருமனதாக பழனிசாமியை, முழுமையாக ஏற்றுள்ளனர். எனவே, இது பின்னடைவு கிடையாது.
தீர்ப்பு குறித்து நிர்வாகிகள் ஆலோசித்து, அடுத்து செய்ய வேண்டியது பற்றி முடிவு எடுப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாநினைவிடத்தில் மரியாதைஅ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், நேற்று தன் ஆதரவாளர்களுடன், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான வழக்கில், நீதிமன்ற தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்ததால், பன்னீர்செல்வம் மகிழ்ச்சி அடைந்தார். வீட்டின் முன்பு கூடியிருந்த தொண்டர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
பின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடம் சென்றார். மலர் வளையம் வைத்து, மலர் துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடம் சென்று, மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
அவருடன், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஜே.சி.டி.பிரபாகர், ராமச்சந்திரன், செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் சென்றனர்.


குளிர்காய விரும்பவில்லை: சொல்கிறார் சபாநாயகர்''அ.தி.மு.க., பிரச்னையில், நாங்கள் குளிர்காய விரும்பவில்லை. நியாயப்படி, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
கடந்த 2021 மே 11 முதல் ஆக., 26 வரை, 14 நாட்களுக்கான சட்டசபை நடவடிக்கை குறிப்புகளின், 'பிடிஎப்' வடிவங்கள்; 2021 ஆக., 2ல் நடந்த, சட்டசபை நுாற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படத் திறப்பு விழா சிறப்பு வெளியீடு ஆகியவை, பொது மக்கள் பார்வைக்காக, சட்டசபை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.
சட்டசபையில், www.assemblay.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை, சபாநாயகர் அப்பாவு, நேற்று துவக்கி வைத்தார். சட்டசபை செயலர் சீனிவாசன் உடனிருந்தார்.
பின், சபாநாயகர் அளித்த பேட்டி:

அ.தி.மு.க., தொடர்பாக பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய இருவரும், கடிதம் அனுப்பி உள்ளனர். உள்கட்சி பிரச்னை. நீதிமன்றம் சென்றுள்ளனர்.
சட்டசபையை பொறுத்தவரை, ஜனநாயக மாண்புபடி நடக்கும். இது, அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்னை அல்ல; ஒரு கட்சி பிரச்னை. நல்ல முடிவு வரும்.
சட்டசபை வேறு; நீதிமன்றம் வேறு. சட்டசபைக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அது நியாயப்படி, சட்டப்படி நடக்கும்.
காலதாமதம் இல்லாமல், விருப்பு, வெறுப்பு இல்லாமல், நியாயமான முறையில் நடவடிக்கை இருக்கும். அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிரச்னையில், நாங்கள் தலையிட்டு குளிர்காய விரும்பவில்லை. நேர்மையாக செயல்படுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


ஒன்றுபட வேண்டும்: பன்னீர்செல்வம் விருப்பம்''சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக அளிக்கிறோம்,'' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:இந்த தீர்ப்பை, அ.தி.மு.க.,வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக அளிக்கிறோம். தொண்டர்களின் விருப்பம் நடந்துள்ளது. இது தொண்டர்கள் இயக்கம். இதை யார் பிளவுபடுத்த நினைத்தாலும், அது நடக்காது. சர்வாதிகாரமாக செயல்பட நினைக்கும் தனி நபருக்கோ, ஒரு குடும்பத்துக்கோ, தனி குழுவுக்கோ, இந்த கட்சியை கொடுக்க நினைத்தால், அது நடக்காது. இது, அ.தி.மு.க.,வுக்கு முழுமையான வெற்றி. நாங்கள் ஏற்கனவே அறிக்கை வழியாக தெரிவித்துள்ளோம். அனைவரும் ஒன்றுபட வேண்டும். யாரெல்லாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனரோ, அவர்களில் அ.தி.மு.க., கொள்கைக்கு, கோட்பாடுக்கு இசைந்து வருவோர் சேர்த்து கொள்ளப்படுவர்.
நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து நடப்போம். தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு, விமர்சனத்தை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். அவமானங்களை யார் ஏற்படுத்தினாலும், அதை பொறுத்து, அனைவரையும் அரவணைத்து செல்வது, தலைமைப் பொறுப்பில் இருப்பவர் பண்பு. தொண்டர்கள் எனக்கு அளித்துள்ள பொறுப்பு, ஒருங்கிணைப்பாளர் பதவி. அனைவரும் ஒருங்கிணைந்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தியாகங்களை மனதில் வைத்து செயல்படுவோம்.
அவர்கள் தரப்பு, எங்கள் தரப்பு கிடையாது. அ.தி.மு.க., ஒரே இயக்கம். அது தொண்டர்கள் இயக்கம்.பழனிசாமியுடன் இணைந்து செயல்படுவது குறித்து, தேவைப்பட்டால் கலந்து பேசி முடிவு எடுப்போம். எங்கள் எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும், தொண்டர்கள் விருப்பப்படியும், தமிழக மக்கள் நலன் கருதியும் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அண்ணா துரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் கட்டிக்காத்த ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம், சதிகாரர்கள் கையில் இருந்து மீட்கப்பட்டு, சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் வகையில், நாடே போற்றும் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனியேனும் அவர்கள் திருந்துவர். தொண்டர்களுக்கு மதிப்பளித்து
அவர்களின் செயல்பாடு இருக்கும் நம்புகிறோம்.விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஜெயகுமார் இருக்கிறார்; தினமும் அவருக்கு அது தான் வேலை. திருச்சியில் தங்கியிருந்த போது, அவர்என்னென்ன செய்தார், யார் யாரையெல்லாம்சந்தித்தார் என்று சொன்னால், அசிங்கமாகி விடும்.நடராஜன், முன்னாள் அமைச்சர்

தொண்டர்களுக்கு, ஜெயலலிதா கொடுத்த மரியாதை நிலைநாட்டப்பட்டு உள்ளது. எதேச்சதிகாரமாக, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழுக்கும், கட்சிக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில், தன்னை இடைக்கால பொதுச்செயலராக அறிவித்துக் கொண்ட பழனிசாமியை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (29+ 121)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
18-ஆக-202220:22:14 IST Report Abuse
மலரின் மகள் நீதி துறையில் மேம்பாடுகள் வேண்டும். விதிகளை செவ்வனே ஆய்ந்து நிறைகுறைகளை ஒப்புநோக்கி பொதுக்குழுவை கூட்டுவது தீர்மானம் எடுப்பது போன்றவற்றிற்கு அனுமதி வழங்குவது என்பதற்கு நீதிபதிகள் நேரம் ஒதுக்கவேண்டியதில்லை. அரசின் ஒரு அதிகார அமைப்பே இதை செய்து இதன் மூலம் இதுவே சரியென்று சொல்லியொருக்கலாம். சாமானியர்கள் கூட விதியின்படி பொதுக்குழு நடக்கவில்லை என்பதை எளிதில் உணரலாம். ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியன்று என்று மேல் நீதிமன்றத்தில் தீர்ப்பாவது என்பது அரிதிலும் அரிதாக இருக்கும்வகையில் சிறப்பாக ஆய்ந்து தீர்ப்புகள் வரும்வகையில் தொழில்நுட்பம் கொண்டு நீதிமேலாண்மை சிறப்பு பெறவேண்டும்.
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
18-ஆக-202218:52:37 IST Report Abuse
Godyes தேர்தல் வரும்போது இருவரும் ஒற்றுமையாகிடுவாங்க.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
18-ஆக-202218:16:02 IST Report Abuse
Girija பொதுக்குழு கூட்டலாம் என்று தீர்ப்பு சொன்னவர் மேடைக்கு வரவும் ..................
Rate this:
Suri - Chennai,இந்தியா
18-ஆக-202219:53:03 IST Report Abuse
Suriவந்து பிறிதொருமுறை வெகுமதி வாங்கிக்கொண்டு செல்லவும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X