திண்டிவனம்:தமிழக பா.ஜ., தலைவரை திட்டி, 'வீடியோ' வெளியிட்ட, தி.மு.க., பிரமுகரை கைது செய்யக்கோரி, திண்டிவனத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் 151 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் ராஜசக்தி; தி.மு.க., பிரமுகர். இவர், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை விமர்சித்தும், அவதுாறாக பேசியும் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டிருந்தார்.அவரை கைது செய்யக்கோரி நேற்று முன்தினம் பா.ஜ., நகர நிர்வாகிகள், திண்டிவனம் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் படி அவரை கைது செய்யாததை கண்டித்து, நேற்று காலை 11:00 மணிக்கு பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில், அக்கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர், திண்டிவனம் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர்.
அங்கு வந்த போலீசார், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது. கலைந்து செல்லும் படி அறிவுறுத்தினர். இதனால், பா.ஜ.,வினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, காந்தி சிலை எதிரே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, 151 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.