புதுச்சேரி : ஏனாமில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியம், ஆந்திர மாநிலத்தில் வங்கக் கடல் அருகே, கிழக்கு கோதவாரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது. இந்நிலையில், மத்தியபிரதேசம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் பெய்த கனமழை காரணமாக, கிழக்கு கோதாவரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. உச்சபட்சமாக 23 லட்சம் கன அடி நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், ஏனாம் பிராந்தியத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஒரு வாரத்திற்கு மேலாக மக்கள் அவதிப்பட்டனர்.
அதன்பிறகு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், கடந்த ஒரு வாரமாக மீண்டும் ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கீழ் கோதாவரி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நேற்று பகல் 12:00 மணி நிலவரப்படி, 13 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, ஏனாமின் தாழ்வான பகுதிகளான குரு கிருஷ்ணாபுரம், பாலயோகி நகர், அய்யன்னா நகர், பரம்பெட்டா, கோன வெங்கட்ட ரத்தினம் நகர், ராஜிவ் நகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பல பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். பலர், அருகாமையில் உள்ள உறவினர் வீடுகள் மற்றும் சமுதாய நலக் கூடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.