செஞ்சி-செஞ்சி பகுதி ஏரிகளில் மண் திருடுபவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதால் நாளுக்கு நாள் மண் திருட்டு அதிகரித்து வருகிறது.
செஞ்சி தாலுகாவில் 200க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதில் பாதியளவு ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும் மீதம் உள்ள ஏரிகள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. கடந்த 2 மாதங்களாக செஞ்சி தாலுகாவில் ஏரிகளில் மண் திருட்டு அதிக அளவில் நடந்து வருகிறது.கடந்த ஒரு மாதத்திற்கு முன், பெரியாமூர் ஏரியில் இரவு 7:00 மணிக்கு துவங்கி நள்ளிரவு 1:00 மணிவரை 2 ஜே.சி.பி., 10 டிராக்டர்களைக் கொண்டு மண் அடித்தனர்.
தகவல் தெரிந்து அங்கு போலீசாரும் சென்றனர்.ஆனால், என்ன காரணத்தினாலோ நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டனர். மறுநாள் வருவாய்த்துறையும் ஆய்வு செய்து மண் திருட்டை உறுதி செய்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பியது. அதன் பிறகு மண் திருட்டில் ஈடுபட்டவர் அவசர அவசரமாக வண்டல் மண் எடுப்பதற்கான உத்தரவை ஒன்றிய அலுவலகத்தில் பெற்றுள்ளார். இங்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கடந்த வாரம் சிட்டாம்பூண்டி ஏரியில் ஜே.சி.பி., மூலம் இரவு மண் அள்ளப்படும் தகவல் அறிந்து அனந்தபுரம் போலீசார் அங்கு சென்றனர். பிறகு நடவடிக்கை எடுக்காமல் வந்து விட்டனர்.கடந்த 16ம் தேதி செஞ்சி நகரில் 'பி' ஏரியில் முருகன் கோவில் அருகே இருந்து மண் எடுத்துள்ளனர். நேற்று முன்தினம் பள்ளிகுளம் ஏரியில் இருந்து 50 டிப்பருக்கும் மேல் மண் எடுத்துச் சென்றுள்ளனர்.செஞ்சி பகுதியில் இரவு நேரத்தில் மண் திருட்டு அதிக அளவில் நடந்து வருகிறது. இதில் எதிலும் வாகனங்கள் பறிமுதல், வழக்குப்பதிவு என எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு இதுவரை மண் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது போன்ற சம்பவங்களின் போது வருவாய்த் துறை மற்றும் போலீசாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இரண்டு துறையினரும் சம்பவ இடத்திற்குச் செல்கின்றனர். வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். திருட்டை மொபைல் போனில் படம் எடுக்கின்றனர். அதன் பிறகு திடீரென ஒரு மர்ம போன் வருகிறது. மறு பேச்சு பேசாமல் அனைவரும் திரும்பி வந்து விடுகின்றனர். இந்த மர்ம போன் எந்த துறை அதிகாரியிடம் இருந்து வருகிறது. அல்லது எந்த அரசியல் பிரமுகரிடமிருந்து வருகிறது என்பது புதிராக உள்ளது.