சிதம்பரம்-கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களை கணக்கீடு செய்வதில், வருவாய் அலுவலர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால், மேட்டூர் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், காவிரி வழியாக கீழணைக்கு அதிக தண்ணீர் வந்தது. பாதுகாப்பு கருதி, கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றின் வழியாக 2.50 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.கொள்ளிடத்தில் வெள்ளம் ஏற்பட்டதால், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதிகளையொட்டி கரையோர கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.கிராம மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
நெல், வாழை, முருங்கை உள்ளிட்ட அனைத்து வகையான பயிர்கள் பாதிக்கப்பட்டது.அத்திப்பட்டு, கத்திரிமேடு, தெற்கு மாங்குடி, வடக்கு மாங்குடி, வல்லம்படுகை ஆகிய பகுதிகளில் 150 ஏக்கர் பயிர்கள் முற்றிலும், 500 ஏக்கர் பகுதி யாகவும் சேதம் ஏற்பட்டது.பெராம்பட்டு, கீழகுண்டலபாடி, மேலகுண்டலபாடி, திட்டுகாட்டூர், அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சோளம், வாழை, முருங்கை, மரவள்ளி, கத்திரி, வெண்டை, கொத்தவரை, அரும்பு செடிகள் உள்ளிட்ட 200 ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் வெள்ளத்தில் நாசமாகியது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு கேட்டு, அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, தோட்டக்கலை துறை உயர் அதிகாரிகள் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு, உடனடியாக கணக்கெடுக்க தங்களின் கீழ்நிலை அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.அதன்படி, தோட்டக்கலை துறையினர், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பாதிப்பு குறித்த புள்ளி விபரங்களை சேகரித்து வருகின்றனர். ஆனால், இந்த கணக்கெடுப்பிற்கு, வருவாய்த்துறை அலுவலர்கள் ஒத்துழைப்பு இல்லாததால், வேளாண் துறை கணக்கெடுப்பில் சிக்கல் எழுந்துள்ளது.பாதிக்கப்பட்ட நிலத்தின் சர்வே நம்பரில் எவ்வளவு பரப்பளவு என்பது அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தான் தெரியும். அந்த தகவலை உறுதிபடுத்தினால் கணக்கெடுப்பிற்கு ஏதுவாக இருக்கும்.
ஆனால் அவர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து சம்மந்தப்பட்ட வருவாய்த்துறையினரிடம், வேளாண் துறையினர் கேட்டதற்கு, இது தொடர்பான உத்தரவே எங்களுக்கு மாவட்ட நிர்வாகத்திடமிருந்து வரவில்லை என, கூறி, வேளாண் துறை கணக்கெடுப்பிற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.ஆனால், பக்கத்தில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடக்கரை கரையோரத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் வேளாண், தோட்டக்கலை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து பணியாற்றி கணக்கெடுப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
ஆனால், கடலுார் மாவட்டத்தில், அதற்கான அறிவிப்புகளை மாவட்ட நிர்வாகம் இதுவரை அறிவிக்காததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.