புதுச்சேரி : அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, லாஸ்பேட்டை சிவாஜி சிலை அருகில் உள்ள சிவா விஷ்ணு மஹாலில் நடந்தது.சங்கத்தின் நிறுவனர் கணேச சிவ நிஜானந்தா சுவாமிகள், புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, சிவாச்சாரியார்களுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கினார்.சங்கத்தினுடைய அகில இந்திய தலைவராக சிவசங்கர சர்மா சிவாச்சாரியார், துணைத் தலைவர்களாக திருநள்ளார் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார், ஆதம்பாக்கம் சீதாராம சிவாச்சாரியார், பொதுச்செயலாளராக முத்துக்குமார், இணைச் செயலாளராக செல்வ கபிலர், பொருளாளராக பிச்சுமணி ஆகியோர் பதவியேற்றனர்.சங்கத்தின் சார்பில், 'வேத சிவாகம சாஸ்திர விஜக்ஷனர்' என்ற பட்டம் மற்றும் பாராட்டு சான்றிதழை, வாழும் கலை மைய ஸ்ரீஸ்ரீ பாடசாலை குரு முதல்வர் அவிநாசி சுந்தரமூர்த்தி சிவாச்சாரியாருக்கு, முதல்வர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரி மாநில தலைவர் பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமிக்கு நினைவு பரிசை, சேவா சங்கம் சார்பாக, அகில இந்திய துணைத் தலைவர் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் வழங்கினார்.
சேவா சங்கம் சார்பாக, 'சிவ கைங்கரிய விபூஷணர்' என்ற சான்றிதழை, அகில இந்திய துணைத் தலைவர் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியாருக்கு, முதல்வர் ரங்கசாமி வழங்கினார். இதே பாராட்டு சான்றிதழ் வயதில் மூத்த சிவாச்சாரியார்களுக்கும் வழங்கப்பட்டது. ஆலயம் ஆகமம், ஆதிசைவர் உள்ளிட்ட சிறப்புகள் குறித்து விளக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கொள்கை பரப்புச் செயலாளர் சேது சுப்ரமணியன், அர்த்தனாரி, சாரம் சிவராமன், காரைக்கால் மாவட்ட தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். காரைக்கால் மாவட்ட துணைத் தலைவர் பிரகாஷ் நன்றி கூறினார். விழாவில் தமிழ் மாநில தலைவர் கீர்த்திவாசன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.