கிரைம் ரவுண்ட் அப்: சலூனில் சிறுவன் முகம் கருகியது; பீஹார் வாலிபர்கள் கைது

Added : ஆக 20, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
கோவை : முகத்தை, 'பிளீச்சிங்' செய்த போது கொதிநீர் பட்டதில் சிறுவன் படுகாயமடைந்தது தொடர்பாக, சலுான் நடத்திய பீஹார் வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.பீஹார் மாநிலம், மாத்வானியைச் சேர்ந்தவர் வித்யானந்தன், 22. இவரும், உறவினரான சஞ்சய் தாஸ், 32, என்பவரும், கோவை ஆர்.எஸ். புரத்தில், 'ராக் மென்ஸ் பியூட்டி' சலுான் நடத்தி வருகின்றனர். இந்த சலுானுக்கு, ஆர்.எஸ்.புரத்தைச்
crime, police, arrest

கோவை : முகத்தை, 'பிளீச்சிங்' செய்த போது கொதிநீர் பட்டதில் சிறுவன் படுகாயமடைந்தது தொடர்பாக, சலுான் நடத்திய பீஹார் வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
பீஹார் மாநிலம், மாத்வானியைச் சேர்ந்தவர் வித்யானந்தன், 22. இவரும், உறவினரான சஞ்சய் தாஸ், 32, என்பவரும், கோவை ஆர்.எஸ். புரத்தில், 'ராக் மென்ஸ் பியூட்டி' சலுான் நடத்தி வருகின்றனர். இந்த சலுானுக்கு, ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த, 17 வயது பள்ளிச்சிறுவன் முகம் பிளீச்சிங் செய்வதற்காக சென்றான். அங்கு நீராவியை பயன்படுத்தி ஆவி பிடிக்கச் செய்தனர். அப்போது, முகத்தில் கொதிநீர் பட்டதில் சிறுவன் அலறி துடித்தான்.
முகத்தின் ஒரு பகுதி கருகிய நிலையில், தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அலட்சியமாக செயல்பட்டு சிறுவனுக்கு படுகாயம் ஏற்படுத்திய சலுான் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் புகார் அளித்தனர். விசாரித்த ஆர்.எஸ்.புரம் எஸ்.ஐ., சுகுமாரன், வித்யானந்தன், சஞ்சய் தாஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்.


எலி பேஸ்ட் சாப்பிட்ட தாய் பலி; மகள் 'சீரியஸ்'

விருத்தாசலம்: கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித், 30. இவரது மனைவி பிரியா. 25. இவர்களது ஏழு வயது மகள் தனியார் பள்ளியில், 2ம் வகுப்பு படித்து வருகிறார்.
கணவர் வெளிநாட்டில் இருப்பதால், மன உளைச்சலில் இருந்த பிரியா, கடந்த, 9ம் தேதி மகளுக்கு எலி பேஸ்ட் கொடுத்து, தானும் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியா, நேற்று முன்தினம் இரவு இறந்தார். சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


'லிக்விட்' கஞ்சா விற்றவர் கைது

ஈரோடு : ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியில் விலை உயர்ந்த, 'லிக்விட்' கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார், பவானி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டதும், சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 'செவர்லெட்' கார், வேகமாக புறப்பட்டு சென்றது. போலீசார் துரத்திச் சென்று, காரை மடக்கி பிடித்தனர். காரில், 1 கிலோ கஞ்சா, எட்டு சிறிய பாட்டில்களில், 'லிக்விட்' கஞ்சா, அதை பிரித்து விற்பனை செய்வதற்காக பிளாஸ்டிக் குப்பிகள், ஊசி, நவீன வடிவ போதை பொருட்கள் ஆகியவை இருந்தன. காருடன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விற்பனையில் ஈடுபட்ட, ஈரோடு, வீரப்பன்சத்திரம், அருள்வேலவன் நகரைச் சேர்ந்த முகமது ஆசிக், 28, கைது செய்யப்பட்டார்.ஈரோடு பகுதியில் இலை, துாள் வடிவில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், லிக்விட் வடிவில் மாற்றி, ஒரு குப்பி, 3,000 முதல், 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த லிக்யூட் வடிவ கஞ்சாவை, அதற்கான பேப்பரில் தடவி, அதிக போதைக்காக பயன்படுத்தியது தெரிய வந்தது.


பயிற்சி பெண் டாக்டர் துாக்கிட்டு தற்கொலை

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவ கல்லுாரி விடுதியில், பெண் பயிற்சி டாக்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், ராசிகுமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் காயத்ரி, 24; திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி விடுதியில் தங்கி, பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை நீண்ட நேரமாகியும், காயத்ரி அறை கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த மற்ற பயிற்சி டாக்டர்கள், கதவை தட்டினர். திறக்கப்படாததால், மருத்துவ கல்லுாரி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
கதவை உடைத்து பார்த்தபோது, மின் விசிறியில், காயத்ரி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.முதல் கட்ட விசாரணையில், அவர் மன அழுத்தம் காரணமாக துாக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர். மேலும், அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.


15 வயது சிறுமியருக்கு தொல்லை; இருவருக்கு 'குண்டாஸ்'

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பழனி, 65; அதே பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக இருந்த அவர், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அது குறித்த புகார்படி, கடந்த மாதம், கீரனுார் அனைத்து மகளிர் போலீசார், அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.அதே போல், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த சரவணன், 46, என்பவர், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகார்படி, அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் சரவணனை கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.புதுக்கோட்டை எஸ்.பி., வந்திதா பாண்டே பரிந்துரைப்படி, மாவட்ட கலெக்டர் கவிதாராமு, இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.


latest tamil news
இந்திய நிகழ்வுகள்:


பயங்கரவாதிகள் தாக்குதல்: பி.எஸ்.எப்., வீரர் பலி

அகர்தலா: வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படை வீரர், வீர மரணம் அடைந்தார்.
திரிபுரா மாநிலத்தில், இந்திய - வங்கதேச எல்லையில் காஞ்சன்புரி என்ற இடத்தில் பி.எஸ்.எப்., வீரர்கள் நேற்று வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது வங்கதேச எல்லை பகுதியில் இருந்து தேசிய புரட்சிகர திரிபுரா முன்னணி என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த கிரிஷ் குமார் யாதவ் என்ற வீரர், படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவர், ஹெலிகாப்டர் வாயிலாக அகர்தலாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்களை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.


11 வயது சிறுமி பலாத்காரம்: 4 பேர் கைது

மும்பை: மும்பையில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மூவரையும், அதற்கு உதவிய ஒரு பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் விரார் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், தன் மொபைல் போனை பழுதுபார்க்க ஒரு கடைக்கு சென்று உள்ளார். அங்கு அவருக்கு அறிமுகமான 21 வயது பெண் ஒருவர், ஊரை சுற்றிப் பார்க்கலாம் என சிறுமியை அழைத்துள்ளார். இதை நம்பிய சிறுமி அவருடன் சென்றார். அப்போது, அந்த பெண், தன் ஆண் நண்பர்கள் மூன்று பேரை போனில் அழைத்து உள்ளார்.
இதையடுத்து, அங்கு வந்த அவர்கள், சிறுமியை விநாயகர் சதுர்த்திக்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு பந்தலின் பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இதை அந்தப் பெண் வேடிக்கை பார்த்து உள்ளார். பின் சிறுமியை, அவரது வீட்டுக்கு அருகே விட்டு சென்றனர். இது குறித்த புகாரின்படி, போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களையும், இந்தச் சம்பவத்துக்கு காரணமான பெண்ணையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


துபாயில் மனைவி 'ஜாலி': விஷம் குடித்த கணவர் பலி

துமகூரு : துபாயில் மனைவி ஜாலியாக சொகுசு வாழ்க்கை நடத்தியபடி, திரும்பி வர மறுத்ததால் மனமுடைந்த கணவர், மூன்று குழந்தைகளுடன் விஷம் குடித்தார். இதில் கணவர் உயிரிழந்தார். குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் துமகூரை சேர்ந்தவர் சமிவுல்லா, 38. பெயின்டரான இவரது மனைவி சாகேரா பானு, 33. இவர்களுக்கு 12 - 10 மற்றும் 7 வயதில் என மூன்று குழந்தைகள் உள்ளனர். சகேரா பானு மூன்று ஆண்டுகளுக்கு முன், தன் அக்காவுடன் வீட்டு வேலைக்காக துபாய் சென்றார். துவக்கத்தில் மாதம் தோறும் 10 ஆயிரம் ரூபாய் அனுப்பினார். தற்போது சில மாதமாக பணம் அனுப்புவதில்லை. அங்கு 'ஹுக்கா பார், டான்ஸ் கிளப்' என ஜாலியாக இருந்தார். இதை அவரே 'வீடியோ கால்' செய்து கணவருக்கு காண்பித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், 'நீ வேலையே பார்க்க வேண்டாம்; ஊருக்கு வந்து விடு' என, கூறியுள்ளார். அதற்கு மனைவி, 'நான் அங்கு வரமாட்டேன்; இந்த வாழ்க்கை நன்றாக உள்ளது; இங்கேயே இருக்கிறேன்' என, கூறி காதலன் ஒருவரையும் காட்டி உள்ளார். தன்னால் மூன்று குழந்தைகளையும் பராமரித்து கொண்டு, வேலைக்கும் செல்ல முடியாத கணவர், தினமும் மனைவிக்கு போன் செய்து வருமாறு கூறி உள்ளார். குழந்தைகளும் அழைத்துள்ளனர்.
ஆனால், மனைவி பிடிவாதமாக இருந்தார். இதனால் விரக்திடைந்த சமிவுல்லா, மூன்று குழந்தைகளுடன் கடந்த 13ம் தேதி விஷம் குடித்தார். தகவலறிந்த உறவினர்கள், நான்கு பேரையும் துமகூரு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி, 16ம் தேதி சமிவுல்லா உயிரிழந்தார். மூன்று குழந்தைகளும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உறவினர்கள் கொடுத்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.


கொசு மருந்து குடித்த 2 வயது குழந்தை பலி

உத்தரகன்னடா: உத்தரகன்னடாவில், கொசு ஒழிப்பு மருந்து குடித்து 2 வயது குழந்தை இறந்தது.
கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா, ஹொன்னாவராவின், காவூர் கிராமத்தில் வசித்தவர் ஆரவ் மகேஷ், 2. இந்த குழந்தை நேற்று காலை, 'குட்நைட்' கொசு ஒழிப்பு மருந்தை, கையில் வைத்து விளையாடியது. இதை பெற்றோர் கவனிக்கவில்லை. அப்போது அதிலிருந்த திரவத்தை குடித்துவிட்டது.மயங்கி விழுந்த குழந்தையை, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. ஹொன்னாவரா போலீசார் விசாரிக்கின்றனர்.


உலக நிகழ்வுகள்:


அமெரிக்காவில் காந்தி சிலை சேதம்

நியூயார்க் : அமெரிக்காவில் கோவில் வாசலில் இருந்த காந்தி சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹிந்து கோவில் வாசலில், மஹாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது.கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த சிலையை மர்ம நபர்கள் சிலர் சமீபத்தில் சேதப்படுத்தினர்.இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகார்படி, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், காந்தி சிலையை சுத்தியலால் உடைத்த மர்மநபர்களை தேடி வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பரில் வாஷிங்டன், இந்த ஆண்டு பிப்ரவரியில் மன்ஹாட்டன் ஆகிய இடங்களிலும் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
20-ஆக-202208:00:22 IST Report Abuse
Barakat Ali "விற்பனையில் ஈடுபட்ட, ஈரோடு, வீரப்பன்சத்திரம், அருள்வேலவன் நகரைச் சேர்ந்த முகமது ஆசிக், 28, கைது செய்யப்பட்டார்." இவர்களால் எங்கள் மதம் ஆபத்தானதாகப் பார்க்கப்படுகிறது .....
Rate this:
raja - Cotonou,பெனின்
20-ஆக-202215:19:05 IST Report Abuse
rajaமதம் மட்டுமல்ல உங்கள் சமூகத்தில் உள்ள அனைவரையுமே ஆபத்தானவர்களாத்தான் பார்க்கிறார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X