வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மதுபான லைசென்ஸ் கொடுத்த வழக்கில் மணிஷ் சிசோடியா முதல் குற்றவாளி என்றாலும், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தான் முக்கிய குற்றவாளி என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
மது விற்பனை உரிமம் வழங்கும் நடைமுறையை மாற்றி, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில், டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட 21 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில், மிக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியாக சிசோடியா பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேட்டியளித்த மணிஷ் சிசோடியா, கெஜ்ரிவாலை கண்டு பயப்படுவதால் மத்திய அரசு சி.பி.ஐ., மூலம் சோதனை நடத்தி வருவதாக கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது: மதுபான மோசடியில் முதல் குற்றவாளி மணிஷ் சிசோடியா. ஆனால், கெஜ்ரிவால் தான் முக்கிய குற்றவாளி. இந்த மோசடிக்கு பின் அவரது உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது. எந்த கேள்விக்கும் அவரால் பதிலளிக்க முடியவில்லை. உங்களின் மதுபான கொள்கை சரியாக இருந்தால், அதனை திரும்ப பெற்றது ஏன்? மதுபான தொழிலதிபர்கள் மீது மென்மையான போக்கை கையாண்டது ஏன்? நாட்டு மக்கள் முன் தோன்றி 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கெஜ்ரிவாலுக்கு சவால் விடுகிறேன். மணிஷ் சிசோடியா, ஊழலுக்கு பிறகு தனது பெயரை (manish sisodia என்பதை MONEYSHH ) மாற்றி எழுதி வருகிறார். இவ்வாறு அனுராக் தாக்கூர் கூறினார்.