வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
விநாயக சதுர்த்தி விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்படுகின்றன.

பின்னர் விநாயகர் சிலையை 3வது நாள், 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு வரும் ஆக.,31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட வழிமுறைகளில் கூறியிருப்பதாவது: ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை நீர் நிலையில் கரைக்க கூடாது. பிளாஸ்டர் ஆப்பாரிஸ் (பி.ஒ.பி), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல்(பாலிஸ்டிரின்) கலவையில் செய்யப்பட்ட சிலைகளை கரைக்க கூடாது.
சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். சிலைகளுக்கு ஆபரணங்கள் தயாரிப்பதற்காக உலர்ந்த மலர்கள்,. வைக்கோல், மரங்களின் இயற்கை பிசினை பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.