வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: கடந்த முறை ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் சண்டிகரில் நடந்தது. அடுத்த கூட்டம் செப்டம்பரில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தை தமிழகத்தில் நடத்த வேண்டும் என, தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை விடுத்திருந்தார்.

சமீபத்தில் அவர், ஜி.எஸ்.டி., கவுன்சில் தலைவராக இருக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் மூன்று பக்க கடிதம் எழுதியுள்ளார்.இதில், 'அடுத்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும். மதுரை என் தொகுதி மட்டுமல்ல, தமிழக கலாசாரத்தை பறைசாற்றும் நகரம்.
கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து மாநில அமைச்சர்களையும், மதுரையில் உள்ள மீனாட்சி கோவில், சரித்திரப்புகழ் வாய்ந்த இடங்கள் மற்றும் அருகில் உள்ள அனைத்து இடங்களுக்கும் நானே அழைத்து செல்கிறேன். கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து அமைச்சர்களுக்கும் தமிழக முதல்வர் விருந்து அளிப்பார்' என எழுதியுள்ளாராம் தியாகராஜன்.

இதையடுத்து, தமிழக நிதி அமைச்சர், மத்திய நிதி அமைச்சருக்கு அடிக்கடி போன் செய்து 'ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு தேதி குறித்துவிட்டீர்களா' என கேட்டுக் கொண்டேயிருக்கிறாராம். 'இந்தக் கூட்டத்தை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நடக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்' எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.