வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'தரமற்ற உணவு தயாரித்து வினியோகம் செய்வது, ஆரோக்கியமற்ற சமுதாயத்தை உருவாக்க வழிவகுக்கும். முதல்வர் ஸ்டாலின், இதில் தனிக் கவனம் செலுத்தி, உணவு பாதுகாப்பு துறையை மேம்படுத்த வேண்டும்' என,அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அவரது நேற்றைய அறிக்கை: உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக, வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வருபவர்கள், சென்னையில் உள்ள உணவகங்களை நம்பி தான் உள்ளனர். இதற்கேற்ப உணவகங்களின் எண்ணிக்கையும், உணவு விடுதிகளும் நடமாடும் உணவகங்களும் பெருகிக் கொண்டே உள்ளன.
![]()
|
பெரும்பாலான சைவ மற்றும் அசைவ உணவகங்களில், தரமற்ற உணவு வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.உணவு பாதுகாப்பு துறையின் ஆய்வும், இதை உறுதி செய்கிறது. மிகப்பெரிய உணவகங்களில் கூட சமையல் அறை, சுகாதாரமற்ற முறையில் இருந்ததையும், துர்நாற்றம் வீசும் அளவில் இருந்ததையும், உணவுப் பொருட்களில் புழு, பூச்சி இருந்ததையும், தரம் மிகவும் குறைவாக இருந்ததையும், கெட்டு போன இறைச்சி வைக்கப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்து உள்ளனர்.
உணவகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, உணவு பாதுகாப்புத்துறை மேம்படுத்தப்படவில்லை. சுகாதாரமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்களின் மீது, கடும் நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே, இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.