வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'அரசிடம் இருந்த ரகசிய ஆவணம் வெளியில் கசிய காரணமாக இருந்தவர்களை கைது செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: நாட்டிலேயே நிர்வாக திறமையற்றதாக தமிழக அரசு உள்ளது. தமிழகம் சீரழிந்த நிலையில், முதல்வர், 'போட்டோ ஷூட்' நடத்தி வருகிறார். நாட்டில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களையும் பார்த்து, மக்கள் கொதிப்படைந்து உள்ளனர். இதை திசை திருப்ப, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் அறிக்கையை வெளியிட்டு, ஒரு நாடகத்தை, முதல்வர் அரங்கேற்றி இருக்கிறார்.
![]()
|
துாத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து விசாரித்து, அறிக்கை அளிக்க 2018ல், அ.தி.மு.க., அரசு தான் கமிஷன் அமைத்தது. இது குறித்து, சி.பி.ஐ.,யும் விசாரித்து வருகிறது. கமிஷனின் இறுதி அறிக்கை, மே மாதம், 'சீல்' இடப்பட்ட உறையில் வைத்து, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை, 3,000 பக்கங்களை உடையது என்றும் கூறப்படுகிறது. அதில், என்ன பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று, யாருக்கும் தெரியாது; அரசும் இதுவரை வெளியிடவில்லை.
ஆனால், அறிக்கையில் என்னென்ன உள்ளன என்பது குறித்து, தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசிடம் உள்ள ரகசிய ஆவணங்கள் கசிந்தது எப்படி? இந்த ரகசியத்தை காக்க முடியாதது, அரசின் கையாலாகத்தனமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசிடம் இருந்த ரகசியஆவணம் வெளியாக காரணமாக இருந்தவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து, அவர்களை கைது செய்ய வேண்டும். ரகசியத்தை காக்க தவறிய, முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.