வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வந்தவாசி: திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ்சை மது போதையில் இயக்கிய ஓட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பஸ்சை நடத்துனர் இயக்கியுள்ளார். இச்சம்பவத்தில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருப்பதியிலிருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ்சை ஓட்டுநர் தரணேந்திரன் இயக்கி வந்தார். சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பஸ்சை ஓட்டுநர் சற்று தடுமாற்றத்துடன் இயக்கி வந்ததாக கூறப்படுகிறது. காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி வருவதற்குள் பல்வேறு இடங்களில் தாறுமாறாக இயக்கபட்டதால் சந்தேகம் அடைந்த பயணிகள், ஓட்டுநர் மதுபோதையில் பஸ்சை இயக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால், நடத்துனர் ஹோலிப்பேஸிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஓட்டுநரை எழுப்பிவிட்டு நடத்துனர் பஸ்சை இயக்கியுள்ளார். பயணிகள் தொடர்ந்து கூச்சலிட்டதால், வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் பஸ்சை நிறுத்தினார். பின்பு, ஓட்டுநரை கீழிறக்கி வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து அங்கு வந்த வந்தவாசி போலீசாரிடம் தரணேந்திரனை ஒப்படைத்தனர். மதுபோதையில் ஓட்டுநர் பஸ்சை இயக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் தரணேந்திரன் மற்றும் அனுமதியின்றி பஸ்சை இயக்கிய நடத்துனர் ஹோலிப்பேஸ் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.