சிதம்பரம்,-சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குழுவினர், நகைகளை மதிப்பீடு செய்து, கணக்குகளை ஆய்வு செய்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் உலக புகழ் பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. பொது தீட்சிதர்களின் பராமரிப்பில் உள்ள இக்கோவிலில், பல முறைகேடுகள் நடப்பதாக, அரசிடம் பல தரப்பினர் புகார் தெரிவித்தனர்.இந்நிலையில், அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வர உள்ளதாக, கோவில் பொது தீட்சிதர்களுக்கு கடிதம் அனுப்பினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில் பொது தீட்சிதர்கள் பதில் கடிதம் அனுப்பினர்.பின், ஆய்வுக்கு வருமாறு, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு, கடந்த வாரம் தீட்சிதர்கள் கடிதம் அனுப்பினர்.இதையடுத்து, திருவண்ணாமலை துணை ஆணையர் குமரேசன், கடலுார் துணை ஆணையர் ஜோதி, விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், திருச்சி நகை மதிப்பீட்டு வல்லுனர் தர்மராஜன், திருவண்ணாமலை நகை மதிப்பீட்டு குழு வல்லுனர் குமார்.விழுப்புரம் நகை மதிப்பீட்டு குழு வல்லுனர் குருமூர்த்தி உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழுவினர், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு, நேற்று காலை 11:00 மணிக்கு வந்தனர்.இக்குழுவினரை, தீட்சிதர்கள் அழைத்துச் சென்று, கணக்குகளை காண்பித்தனர். வரவு - செலவு கணக்குகளை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.நடராஜர் கோவில் நகைகளை சரிபார்க்கும் பணி துவங்கியது. காலையில் துவங்கிய ஆய்வு மாலை வரை நீடித்தது. நாளை வரை ஆய்வை தொடர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்
.தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, தனி சமய பிரிவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவிலில், அறநிலைத்துறை எவ்வித ஆய்வும் நடத்தக் கூடாது. இதுகுறித்து நாங்கள் பலமுறை கடிதம் வாயிலாக ஹிந்து சமய அறநிலைத் துறைக்கு தெரிவித்துள்ளோம்.கடந்த 1956ல் முதன்முதலாக நகைகள் சரிபார்ப்பு ஆய்வுக்கு ஒத்துழைத்துள்ளோம். தீட்சிதர்களின் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மையை நிரூபிக்கவே தற்போது நகை சரிபார்ப்பு ஆய்வுக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.