தமிழக அரசு அறிவிப்பின் அடிப்படையில், சொத்து வரி உயர்வு கணக்கீட்டில், உள்ளாட்சி அதிகாரிகள் பெருமளவில் குளறுபடி செய்துள்ளதால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சிகளில் கட்டடங்களுக்கு விதிக்கப்படும் சொத்து வரி தான் பிரதான வருவாய் ஆதாரம்.
இதில், அதிகாரிகள் சரியான முடிவை, உரிய காலத்தில் எடுக்காததால், பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்தது. இதனால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வருவாய் கிடைப்பதில் தேக்க நிலை ஏற்பட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 2018 ஜூலை 19ல் சொத்து வரி உயர்த்தப்பட்டது. தேர்தல் உள்ளிட்ட காரணங்களால், சொத்து வரி உயர்வு ஆணை, 2019ல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
![]()
|
சதுர அடி கணக்கு
சட்டசபை தேர்தலுக்கு முன், சொத்து வரி உயர்வை எதிர்த்த தி.மு.க.,வோ, ஆட்சிக்கு வந்த பின், ஏப்., 1ல் சொத்து வரி உயர்வை அறிவித்தது. இதன்படி, வீடுகளின் சதுர அடி அடிப்படையில், 50 முதல் 100 சதவீதம் வரை உயர்வு அறிவிக்கப்பட்டது. தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும், 100 சதவீத சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டது.உள்ளாட்சி அமைப்புகள், ஒவ்வொரு சொத்துக்கும் இதற்கு முன் வசூலிக்கப்பட்ட வரி என்ன, உயர்த்தப்பட்ட வரி என்ன என்பது தொடர்பான தகவல் குறிப்பை அனுப்பி வருகிறது. இதில், எவ்வித அடிப்படை வழிமுறையும் இன்றி, மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள், அதிகபட்ச தொகையை சொத்து வரியாக நிர்ணயித்து, நோட்டீஸ் அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.
உரிமையாளர்கள்
இது குறித்து, பொது மக்கள் கூறியதாவது: தமிழக அரசு அறிவிப்பின்படி, 2017க்கு முன் என்ன தொகை வரியாக செலுத்தப்பட்டதோ, அதைவிட 10 மடங்கு அதிகமாக புதிய சொத்து வரி விகிதங்களை நிர்ணயித்து, உரிமையாளர்களுக்கு, உள்ளாட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.உதாரணமாக, சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலம், பள்ளிக்கரணை 189வது வார்டுக்கு உட்பட்ட செல்வம் நகரில், சொத்து வரி உயர்வு கணக்கீட்டில், மெகா குளறுபடி நடந்துள்ளது. கடந்த 2017 நிலவரப்படி, அரை ஆண்டுக்கு 2,450 ரூபாயாக இருந்த சொத்து வரி தற்போது, 12 ஆயிரத்து 656 ரூபாயாகவும்; 850 ரூபாயாக இருந்த சொத்து வரி தற்போது, 4,393 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில், 50 பேருக்கான சொத்து வரி விகிதங்களை ஆய்வு செய்ததில், 26 பேருக்கு அபரிமிதமான தொகை குறிப்பிடப்பட்டுள்ளது.
தீர்வு என்ன?
எந்த அடிப்படையில் சொத்து வரி இவ்வளவு உயர்த்தப்பட்டது என்று மாநகராட்சி அதிகாரிகளை கேட்டால், உரிய பதில் வருவதில்லை. சென்னை மட்டுமின்றி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில், இப்படி அபரிமிதமாக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், 2021 - 22 நிதி ஆண்டில், மக்கள் தங்கள் சொத்துக்களுக்கு, என்ன தொகையை சொத்து வரியாக செலுத்தினரோ, அதன் மீது அரசு அறிவித்த உயர்வை அப்படியே அமல்படுத்தாமல், உள்ளாட்சி அமைப்புகள், தன்னிச்சையாக புதிய கணக்கு போட்டுள்ளன.
அடிப்படை வசதி ரீதியாக எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத இடங்களில், அபரிமிதமாக சொத்து வரியை உயர்த்துவது நியாயமில்லை; தமிழக அரசு இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -