விபத்தில் 6 பேர் உயிரிழப்பு; கலெக்டர் - எஸ்.பி., ஆய்வு| Dinamalar

விபத்தில் 6 பேர் உயிரிழப்பு; கலெக்டர் - எஸ்.பி., ஆய்வு

Added : ஆக 24, 2022 | |
சேலம் - உளுந்துார்பேட்டை நான்கு வழிச்சாலையில், ஆத்துார் புறவழிச்சாலை, இந்திரா நகர் மேம்பாலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆம்னி வேன் மீது ஆம்னி பஸ் மோதியதில் தாய், மகள் உள்பட, 6 பேர் உயிரிழந்தனர்.விபத்து நடந்த இடத்தில் சேலம் கலெக்டர் கார்மேகம் தலைமையில், எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், 'நகாய்' திட்ட இயக்குனர் குலோத்துங்கன் உள்ளிட்ட அலுவலர் குழுவினர் ஆய்வு செய்தனர்.


சேலம் - உளுந்துார்பேட்டை நான்கு வழிச்சாலையில், ஆத்துார் புறவழிச்சாலை, இந்திரா நகர் மேம்பாலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆம்னி வேன் மீது ஆம்னி பஸ் மோதியதில் தாய், மகள் உள்பட, 6 பேர் உயிரிழந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் சேலம் கலெக்டர் கார்மேகம் தலைமையில், எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், 'நகாய்' திட்ட இயக்குனர் குலோத்துங்கன் உள்ளிட்ட அலுவலர் குழுவினர் ஆய்வு செய்தனர். சேதமடைந்த வேன், பஸ்சை பார்வையிட்டனர்.
பின், கலெக்டர் கார்மேகம் கூறுகையில், ''ஆத்துார் புறவழிச்சாலையில் விபத்தை தவிர்க்க, சாலை தடுப்புகள் அதிகப்படுத்தப்படும். சாலை விதிமுறை, விழிப்புணர்வு பதாகைகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புறவழிச்சாலை மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் மின்விளக்கு அமைத்து, எரியாத விளக்குகள் சரிசெய்யப்படும். ஆத்துார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க, போலீசார் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
எம்.எல்.ஏ., ஆறுதல்
முன்னதாக, கலெக்டர் கார்மேகம், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், விபத்தில் சிக்கியவர்கள், அவர்களது உறவினர்களை, சேலம் அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினர். அத்துடன், அவர்களுக்கான பாதிப்பு, அளிக்கப்படும் உயர்சிகிச்சை குறித்து, விரிவாக கேட்டறிந்தனர். மேலும் தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தும் உடனுக்குடன் மேற்கொள்ள, மருத்துவர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கலெக்டர் மீது குற்றச்சாட்டு
ஆத்துாரில் வேன் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் தாய், மகள் உள்பட ஆறு பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் கூறியதாவது: ஆத்துார் புறவழிச்சாலையில் கோர விபத்து நடந்துள்ளது. இச்சாலை பகுதியில் தகவல் பலகை, மின்விளக்கு வசதியில்லை; இருவழிச்சாலையை, 4 வழிச்சாலையாக மாற்ற, பலமுறை அரசுக்கு தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு, தலா, 10 லட்சம் ரூபாயை, தமிழக அரசு வழங்க வேண்டும்.
சேலம் கலெக்டரிடம், எம்.எல்.ஏ.,க்கள் சென்று மக்கள் பிரச்னைகளை கூறினாலும், அலட்சியமாக பதில் அளிக்கிறார். ஏத்தாப்பூரில் அனுமதியின்றி மரம் வெட்டி கடத்தியது குறித்து புகார் தெரிவித்த பின், ஒரு வாகனத்தை மட்டும் பறிமுதல் செய்தனர். கலெக்டர் கார்மேகம், தி.மு.க., மாவட்ட செயலர் போன்று செயல்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X